அட சூப்பர்ப்பா! உலகிலேயே பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் நம்ம சென்னை.. லிஸ்ட்டை பாருங்க!
சென்னை: உலகிலேயே மிக பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் நமது சென்னை, முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியாவில் பல நகரங்களில் குற்றங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தினந்தோறும் நடைபெற்று வருகின்றன. பெரிய நகரங்களில் குற்றங்களைக் கட்டுப்படுத்துவது அரசுக்கும், காவல்துறைக்கும் சவாலாகவே உள்ளது. இந்தியாவின் பெரு நகரங்களைப் பொறுத்தவரை நமது சென்னை எப்போதுமே பாதுகாப்பாகத் திகழும்.

வட மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், அண்டை மாநிலங்களைச் சேர்ந்த பலர் சென்னையில் வசித்து வருகின்றனர். அவர்கள் எல்லாம், மற்ற நகரங்களை விட சென்னை தங்களைப் பாதுகாப்பாக உணரச் செய்வதாக கூறுவதுண்டு. அது, கிரைம் இண்டெக்ஸ் போன்ற உலகளாவிய கணக்கீடுகளிலும், தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கைகளிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகில் மிகவும் பாதுகாப்பான நகரம் எது என்பது குறித்த 2023ஆம் ஆண்டுக்கான அறிக்கையை, உலக நாடுகளில் உள்ள நகரங்களின் குற்றப் பதிவுகளை ஆய்வு செய்து கிரைம் இண்டெக்ஸை NUMBEO வெளியிட்டுள்ளது. அதில், இந்த ஆண்டுக்கான பட்டியலில், சென்னை நகரம், உலகின் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
கிரைம் இண்டெக்ஸ் பட்டியலில் சென்னை 208வது இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது, கிரைம் இண்டெக்ஸ் பட்டியலில் முதல் இடம் பிடிக்கும் நகரம் மிகவும் ஆபத்தானது, பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் நகரமே பாதுகாப்பானது. அதன்படி, மொத்தமாக அளவீடு செய்யப்பட்ட 334 நகரங்களில் சென்னை 208வது இடத்தைப் பிடித்து, பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாக உள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை குற்ற அளவீடு 40 சதவீதமாகவும், பாதுகாப்பு அளவீடு 60 சதவீதமாகவும் உள்ளது. டெல்லி, நொய்டா, குர்கான், பெங்களூர், கொல்கத்தா உள்ளிட்ட இந்திய நகரங்களில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் சென்னையை விட பல இடங்கள் பின் தங்கி உள்ளன.
கிரைம் இண்டெக்ஸில் டெல்லி 72வது இடத்திலும், நொய்டா 93வது இடத்திலும், குர்கான் 103வது இடத்திலும் பெங்களூர் 110வது இடத்திலும், கொல்கத்தா 161வது இடத்திலும், மும்பை 175வது இடத்திலும், ஹைதராபாத் 185வது இடத்திலும், சண்டிகர் 187வது இடத்திலும் புனே 194வது இடத்திலும் உள்ளன. சென்னை 208வது இடத்தில் உள்ளது. இதன்மூலம் மேற்சொன்ன நகரங்களை விட மிகவும் பாதுகாப்பான நகரமாக சென்னை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள நகரங்களிலேயே மங்களூர் தான் மிகவும் பாதுகாப்பான நகரமாக பட்டியலிடப்பட்டுள்ளது. கிரைம் இண்டெக்ஸ் குறியீட்டில் 296வது இடத்தில் உள்ளது மங்களூர். அதற்கு அடுத்த இடங்களில் 259ல் வதோதரா, 253ல் அகமதாபாத், 241ல் சூரத், 230ல் நவி மும்பை ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
எனினும் மெட்ரோ நகரங்களான டெல்லி, கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களை விட மிகவும் பாதுகாப்பான இடத்தில் சென்னை உள்ளது நாம் உண்மையிலேயே பெருமைப்பட வேண்டிய விஷயம் தான்.












Click it and Unblock the Notifications