இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை! காவல்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்!
சென்னை: இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை என காவல்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றவுள்ள நிலையில் காவல்துறை கொள்கை விளக்க குறிப்பில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.

அது தொடர்பான விவரம் வருமாறு;
''காவல்துறை இயக்குநர் தலைமையில் பெருநகர சென்னை காவல் இயங்கி வருகிறது. 5 கூடுதல் காவல் ஆணையாளர்கள், 7 காவல் இணை ஆணையாளர்கள் மற்றும் 31 காவல் துணை ஆணையாளர்கள் ஆகியோர் அவருக்கு உதவி செய்து வருகின்றனர்.
102 உள்ளூர் காவல் நிலையங்கள், 37 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், 56 போக்குவரத்து காவல் நிலையங்கள் மற்றும் 24 தனிப்பிரிவுகளுடன் 23,791 காவல் ஆளிநர்கள் பெருநகர சென்னை காவல்துறையில் பணிபுரிந்து வருகின்றனர்.
பெருநகர சென்னை காவல் துறையில் 7 காவல் நிலையங்கள் மதிப்புமிக்க ISO சான்றிதழ்கள் பெற்றுள்ளன. நேர்மையான அர்ப்பணிப்பு மற்றும் சீரிய காவல்பணி ஆகியவற்றின் காரணமாக சென்னை நகரம் இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை காவல்துறையில் பணியாற்றும் காவல் ஆளிநர்களின் நலனுக்காக "மகிழ்ச்சி" என்னும் திட்டம் ரூ.25 இலட்சம் செலவில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்கீழ், காவல்துறையில் தொடர்ச்சியாக பணிக்கு வராதவர்கள், உடல்நலம் குன்றியவர்கள், மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மற்றும் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் உடையவர்கள் என மொத்தம் 459 பேர் மகிழ்ச்சி குழுவினரால் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு மன நல உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.''












Click it and Unblock the Notifications