சென்னையில் பிரபல நகைக்கடை.. பாதி விலைக்கு தங்கம் என ஆஃபர் போட்டு கோடிக்கணக்கில் சுருட்டிய கும்பல்
சென்னை: சென்னையில் முகப்பேரில் இயங்கி வரும் ஏ.ஆர்.டி ஜுவல்லர்ஸ் என்ற நகைக்கடையில், பாதி விலைக்கு தங்கம், 1 லட்சம் முதலீடு செய்தால் வாரம் தோறும் 3 சதவீத வட்டி கிடைக்கும் எனக் கவர்ச்சிகர திட்டங்கள் அறிவித்து மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இருந்து இந்த திட்டத்தில் முதலீடு செய்து பலரும் ஏமாற்றப்பட்ட நிலையில், 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோசடி எப்படி நடைபெற்றது என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
குறுக்கு வழியில் அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு, அப்பாவி மக்களுக்கு ஆசையை காட்டி நடக்கும் மோசடிகள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி மோசடி, நகைச்சீட்டு மோசடி, பணத்தை முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக முதலீடு என புதுப்புது டெக்னிக்குகளை பயன்படுத்தி மோசடி கும்பல்கள், பணத்தை பெற்று ஏமாற்றி விடுகின்றன.

ஆசையை தூண்டி மோசடி
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என்ற ஆசையில் முதலீடு செய்யும் அப்பாவிகள் இந்த வலைகளில் விழுந்துவிடுகிறார்கள். இத்தகைய மோசடிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும், இந்த மோசடிகள் நின்றபாடில்லை. எப்படியெல்லாம் மனிதனின் ஆசையை தூண்டி, ஏமாற்றும் சம்பவங்கள் நடைபெறுகின்றன என்பது பற்றி பல சினிமாக்களிலும் காட்சியாக வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்போம்.
சதுரங்க வேட்டை பட பாணியில்
குறிப்பாக சதுரங்க வேட்டை படத்தில், ஒருவருக்கு பணத்தாசை காட்டி அவர்களிடமிருந்து எப்படி பணத்தை மோசடி கும்பல் சுருட்டுகிறது என்பதை தத்ரூபமாகக் காட்டியிருப்பார்கள். நகைக்கடை ஒன்றில் பாதி விலைக்கு தங்கம் என ஆஃபர் கொடுத்து இருப்பதாக மக்களையும் நகைக்கடை உரிமையாளரையும் சேர்த்து ஏமாற்றிவிட்டும் செல்கிறார்கள் என ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
சரி, அதெல்லாம் இருக்கட்டும்... இங்கே விஷயத்திற்கு வருவோம்.
சென்னையில், கிட்டத்தட்ட சதுரங்க வேட்டை பாணியில்தான் ஒரு மோசடி சம்பவம் நடைபெற்றுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
சென்னை முகப்பேர் நகைக்கடை
சென்னை முகப்பேரில் ஏ.ஆர்.டி ஜுவல்லர்ஸ் என்ற நகைக்கடை இயங்கி வருகிறது. இந்த நகைக்கடையில் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக சில கவர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதாவது, பாதி விலையில் தங்க நகை திட்டம், ஒரு லட்சம் முதலீடு செய்தால் வாரம் தோறும் 3 சதவீத வட்டி கிடைக்கும் என திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
தங்கம் போற ரேட்டிற்கு பாதி விலையில் தங்கம் என்றால் சும்மாவா... என நினைத்த மக்கள், நகைக்கடை விளம்பரத்தை நம்பி முதலீடு செய்தனர். தமிழ்நாடு முழுவதும் இருந்து இந்த நகைக்கடை திட்டத்தில் பலரும் முதலீடு செய்ததால், கோடிக்கணக்கில் பணம் வந்துள்ளது.
ரூ.60 கோடி சுருட்டல்
சுமார் 60 கோடி ரூபாய் வரை இந்த நகைக்கடை நிறுவனம் சுருட்டியதாக சொல்லப்படுகிறது. ஆனால் வாக்குறுதி அளித்தபடி பணத்தை திருப்பிக் கொடுக்காமலும், பாதி விலை தங்கம் திட்டத்திலும் மோசடி செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த பானுவள்ளி, சுஜாதா, திவாய், சந்தோஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
போலீசார் அறிவுறுத்தல்
சென்னையில் நகைக்கடையில் நடைபெற்ற இந்த மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிக வட்டி, பாதி விலையில் தங்கம் என கவர்ச்சிகர விளம்பரங்களை நம்பி மக்கள் ஏமாறக்கூடாது என்றும், ரிசர்வ் வங்கி விதிகளின் படி செயல்படும் நிதி நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications