பிரியாணி.. கார்.. சிறுவர்களை ‘ப்ரெய்ன் வாஷ்’ செய்து.. கோட்டூர்புரம் இரட்டைக் கொலையில் புதிய தகவல்!
சென்னை: சென்னை கோட்டூர்புரம் இரட்டைக் கொலை வழக்கு தொடர்பாக போலீஸ் விசாரணையில் புதிய தகவல் கிடைத்துள்ளது. 4 சிறுவர்களின் செல்போன், இன்ஸ்டாகிராம் ஐடியை பயன்படுத்தி கொலை திட்டம் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகர் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி அருண் (25) மற்றும் அவரது நண்பர் சுரேஷ் என்கிற படப்பை சுரேஷ் ஆகியோர் நண்பர்களோடு சேர்ந்து கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு நேரத்தில் மது குடித்துவிட்டு, கோட்டூர்புரம் நாகவல்லி அம்மன் கோயில் முன்பு மது போதையில் படுத்து தூங்கினர்.

இரவு 10 மணியளவில் அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த சுமார் 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று, மது போதையில் படுத்திருந்த அருண் மற்றும் படப்பை சுரேஷ் ஆகியோரை அரிவாள் மற்றும் கத்தியை கொண்டு சரமாரியாக வெட்டியது. மது போதையில் இருந்ததால் அவர்கள் தப்பிக்க முடியாமல் அலறி துடித்தனர்.
இதில் படப்பை சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அருண் உடல் முழுவதும் வெட்டு காயங்களோடு உயிருக்கு போராடிய நிலையில் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அருண் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், செங்கல்பட்டைச் சேர்ந்த சுரேஷ் என்ற சுக்கு காபி சுரேஷ் (26), கோட்டூர்புரம் கரண் என்ற மனோஜ் (21), வடபழனி ராசுக்குட்டி என்ற செல்வகணபதி (19), ஜீவன் (19) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அருண் என்பவரது காதலியை ரவுடி சுக்கு காபி சுரேஷ் படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு பழிக்கு பழி வாங்க சுக்கு காபி சுரேஷை கொலை செய்ய அருண் திட்டமிட்டு இருந்த நிலையில் இதனை அறிந்த சுக்கு காபி சுரேஷ் மற்றும் அவனது கூட்டாளிகள் அருண் மற்றும் அவரது அண்ணன் அர்ஜுனை கொலை செய்யத் திட்டமிட்டு வந்துள்ளனர். அப்போது அருண் மற்றும் அவருடன் இருந்த அவரது நண்பரான படப்பை சுரேஷை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு தலைமறைவாக இருந்த சுக்கு காபி சுரேஷ் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய 4 சிறுவர்கள் அரசு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கோட்டூர்புரம் இரட்டைக் கொலை வழக்கு தொடர்பாக போலீஸ் விசாரணையில் புதிய தகவல் கிடைத்துள்ளது. 4 சிறுவர்களின் செல்போன், இன்ஸ்டாகிராம் ஐடியை பயன்படுத்தி கொலை திட்டம் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரவுடி சுக்கு காபி சுரேஷ், தமது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆலோசனை நடத்தியுள்ளார். அருண் நடவடிக்கைகளை ஒரு மாதமாக கண்காணித்து கொலை திட்டத்தை அரங்கேற்றி உள்ளனர். கஞ்சா, விதவிதமான சாப்பாடு, செலவுக்கு பணம், செல்போன் ரீசார்ஜ், ஊர் சுற்ற கார் என கொடுத்து சிறுவர்களை மூளைச் சலவை செய்துள்ளனர்.
அருண் நடவடிக்கைகளை அந்த சிறுவர்களின் உதவியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் கண்காணித்து வந்துள்ளார் சுக்கு காபி சுரேஷ். ஞாயிற்றுக்கிழமை இரவு அருண் கடும் போதையில் இருந்ததை உறுதி செய்து கொண்டு அங்கு சென்று அருண், படப்பை சுரேஷ் ஆகியோரை வெட்டிக் கொலை செய்துள்ளனர் என போலீசார் கண்டறிந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications