மாணவிக்கு பாலியல் தொந்தரவு.. சேத்துபட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் கைது
சென்னை: மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கீழ்பாக்கம் போலீசார், ஆசிரியர் ஆனந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்மையில் சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மா ஷேசாத்ரி பாலபவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் பற்றி மாணவிகள் பல்வேறு புகார்களை எழுப்பினர். ஆன்லைன் வகுப்பில் மாணவிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. ஒரு மாணவியை சினிமாவுக்கு அழைத்தாகவும் கூறப்பட்டது.
மேலும் மாணவிகளிடம் நேரடியாகவும், செல்போனிலும் அத்துமீறியதாகவும், ஆன்லைன் வகுப்புகளின்போதும் எல்லை மீறியதாகவும் புகார் எழுந்தது. சமூக ஊடகங்களில் இதுபற்றி பெரும் விவாதங்கள் எழுந்த நிலையில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிஎஸ்பிபி பள்ளி நிர்வாகம் ஆசிரியர் ராஜகோபாலனை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

வணிகவியல் ஆசிரியர்
இந்நிலையில், அதேபோல முன்னாள் மாணவிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக சென்னை அயனாவரம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஒருவர் மீதும் புகார் எழுந்தது. அங்கு 11, 12ஆம் வகுப்புகளுக்கு வணிகவியல் பாடம் எடுத்து வரும் ஆசிரியர் ஆனந்த் மீதுதான் மாணவிகள் புகார் கூறியிருந்தனர்.

பள்ளி நிர்வாகம்
பாலியல் குற்றச்சாட்டுக்குள் உள்ளான ஆசிரியர் ஆனந்தன் குறித்து ள் சமூக வலைதளத்தில் வெளியான உடனேயே அவரை பணியிடை நீக்கம் செய்து மகரிஷி வித்யா மந்திர் பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது. இது தொடர்பாக அயனாவரம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி நிர்வாகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், ''மூக வலைதளங்கள் மூலமும் இ-மெயில் மூலமாகவும் முதுகலை வணிகவியல் ஆசிரியர் ஆனந்த் மீது முன்னாள் மாணவிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதுகுறித்து விசாரிக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை நேர்மையான முறையிலும் வெளிப்படையாகவும் நடைபெறும். அக்குழு விரைவில் அறிக்கையைச் சமர்ப்பிக்கும். அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும். ஆசிரியர் ஆனந்த் மே 26-ம் தேதி அன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் பள்ளியின் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்களுடன் எவ்விதத்திலும் தொடர்புகொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம்.

முன்னாள் மாணவர்கள்
எங்களின் சொந்தக் குழந்தைகளாகக் கருதும் மாணவர்களின் நலனும் பாதுகாப்புமே எங்களுக்கு முக்கியம். அவர்கள் மீது நிகழ்த்தப்படும் எந்தவிதமான வன்முறை, அத்துமீறல், தவறான நடத்தை ஆகியவற்றை எப்போதும் சகித்துக்கொள்ள மாட்டோம். கல்விக்காகவும் மாணவர்களுக்காகவுமே நாங்கள் இருக்கிறோம். முன்னாள் மாணவர்களாக இருந்தாலும் அவர்களும் எங்களுக்கு முக்கியமானவர்களே'' இவ்வாறு பள்ளி நிர்வாகம் கூறியிருந்தது.

கீழ்பாக்கம் போலீசார்
இந்நிலையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் சென்னை கீழ்பாக்கம் போலீசார், சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications