கராத்தே பயிற்சிக்கு வந்த மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. கெபிராஜ் குற்றவாளி என தீர்ப்பு!
சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கில் கராத்தே மாஸ்டர் கெபிராஜ் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. கராத்தே பயிற்சி பெற வந்த மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கெபிராஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
2021ல் பதிவான வழக்கில் கராத்தே மாஸ்டர் கெபிராஜ் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கராத்தே மாஸ்டர் கெபிராஜுக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என்றும் சென்னை மகளிர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை அண்ணா நகரில் கராத்தே பள்ளி நடத்தி வந்த கெபிராஜ் (40) என்பவர் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி கற்றுக் கொடுத்து வந்தார். இந்நிலையில் இளம்பெண் ஒருவர் தான் பள்ளியில் பயின்ற போது விளையாட்டுப் போட்டிகளுக்கு வெளியூர் அழைத்துச் செல்லும்போது தனக்கு கராத்தே மாஸ்டர் பாலியல் தொல்லை கொடுத்ததாக 8 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2021ல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரை விசாரித்த காவல்துறையினர், கெபிராஜ் மீது பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் கெபிராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் லதா நியமிக்கப்பட்டார். கராத்தே மாஸ்டர் கெபிராஜால் பாதிக்கப்பட்டவர்கள், அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அல்லது குற்றச்சாட்டு இருந்தால் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கெபிராஜ் தான் குற்றவாளி என்று மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இவருக்கான தண்டனை விபரங்கள் நாளை அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications