செல்போனுக்கு வந்த லிங்க்! கூடவே போன் கால்.. அடுத்த நொடி காலியான வங்கி பேலன்ஸ்.. ஏமாந்த சென்னை நபர்
சென்னை: உங்கள் பெயரில் பார்சல் வந்து இருப்பதாகவும் அதில் போதைப்பொருள் இருப்பதால் பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள்.. மாட்டாமல் இருக்க நான் சொல்வது போல செய்யுங்கள் எனக் கூறி வேலூரில் நூதன மோசடி ஒன்று நடைபெற்றுள்ளது. இதுபற்றிய விவரங்களை பார்க்கலாம்.
நவீன தொழில் நுட்பம் வளர வளர மோசடிகளும் புதுப்புது வழிகளில் அதிகரித்து வருகின்றன. தற்போது இணைய வழி பரிவர்த்தனை மக்கள் மத்தியில் அதிகரித்து விட்டதால் சைபர் கிரைம் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. கொஞ்சம் அசந்தாலும் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எங்கோ ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு அபேஸ் செய்து விடுவது குறித்த செய்திகளையும் பார்க்கிறோம்..

வேலூர் மாவட்டத்தில் இப்படியான ஒரு மோசடி சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம். சென்னை மதுர வாயலை சேர்ந்தவர் ராஜசேகரன். சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். கடந்த 13 ஆம் தேதி வேலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு ராஜசேகரன் சென்று இருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.
ஸ்கைப் லிங்க் அனுப்புவதாக: அதில் பேசிய நபர் பிரபல தனியார் கூரியர் நிறுவனத்தின் மேலாளர் என்றும் உங்கள் பெயரில் ஒரு வங்கியில் இருந்து ஏடிஎம் கார்டு ஒன்றும் அதனுடன் பார்சலும் வந்துள்ளது. அந்த பார்சலில் போதைப்பொருள் உள்ளது. எனவே, நாங்கள் போலீசாரிடம் புகாரளித்து இருக்கிறோம். இது தொடர்பாக ரிசர்வ் வங்கி அதிகாரிகளும் சைபர் கிரைம் போலீசாரும் விசாரணை மெற்கொண்டு வருகிறார்கள் எனக் கூறியுள்ளார்.
விசாரிக்க தங்களுடன் போலீசாரும் வருவார்கள் என்று மிரட்டியுள்ளார். இதனால், ராஜசேகரன் பதறிபோயுள்ளார். மேலும், போலீசில் சிக்காமல் இருக்க நான் ஒரு ஐடியா தருகிறேன் என்று அந்த மர்ம நபர், ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த ராஜசேகரனிடம் ஸ்கைப் மூலம் தொடர்பு கொள்ளுமாறு கூறி ஸ்கைப் லிங்கை ராஜசேகரன் மொபைல் எண்ணிற்கு அனுப்பியுள்ளார்.
ரூ.27 லட்சம் அபேஸ்: அச்சத்தில் இருந்த ராஜசேகரனோ.. கொஞ்சமும் யோசிக்காமல் உடனே லிங்கை கிளிக் செய்து தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அப்போது திடீரென தனது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. அதில், தனிநபர் கடன் கேட்டு விண்ணப்பித்ததாகவும் அதன் படி ரூ.19 லட்சம் அக்கவுண்டில் வரவு வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டு இருந்தது.
பின்னர் ஒரு சில நொடிகளில் அந்த பணம் வங்கிக் கணக்கில் இருந்து மாயமானது. மேலும் ராஜசேகரன் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.7 லட்சமும் மாயமானது. வங்கிக் கடன் பெற்றது மற்றும் ஏற்கனவே இருப்பில் இருந்த பணமும் சேர்த்து என மொத்தமாக ரூ. 27 லட்சத்து 46 ஆயிரத்து 101 ரூபாய் மாயமானது. அப்போது தான் தனக்கு போன் செய்தது மோசடி நபர் என்றும் அனுப்பப்பட்டது ஸ்கைப் லிங்க் இல்லை என்றும் தனது போனை கட்டுப்பாட்டில் எடுக்கும் லிங்க் என்பதையும் கண்டறிந்துள்ளார்.
போலீசார் விசாரணை: தனது பெயரில் வங்கியில் இருந்து தனிநபர் கடன் பெற்று இருப்பில் இருந்த பணத்தை சுருட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து கூரியர் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது உங்களுக்கு ஒரு பார்சலும் வரவே இல்லை என்றும் கைவிரித்தார்கள். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ராஜசேகரன் உடனடியாக வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு புகாரளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதுபோல மர்ம நபர்கள் போன் செய்து மிரட்டினால் நம்ப வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளார்கள். அடையளாம் தெரியாத எண்ணில் இருந்து லிங்க் வந்தால் அதை கிளிக் செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications