கவனமாக இருங்க.. சென்னையின் கவுன்சிலர்களுக்கு மேயர் பிரியா போட்ட முக்கிய ஆர்டர்.. பரபர உத்தரவு!
சென்னை: சென்னையில் உள்ள கவுன்சிலர்கள் 199 பேருக்கும் மேயர் பிரியா முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் பல்வேறு முக்கியமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. சென்னையில் மாநகராட்சி தேர்தல் நடக்காமல் இருந்ததால் கடந்த 6 வருடமாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படாமல் இருந்தது.
நேரடியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படாமல் மறைமுகமாக பட்ஜெட் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வந்தன. இந்த நிலையில் கடந்த வாரம் நேரடியாக தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

சென்னை
முக்கியமாக சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பல சுகாதார திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்படி சென்னை மாநகராட்சி குப்பைகளை சேமிக்க பேட்டரியில் இயங்கும் மேலும் 795 வாகனங்களை வாங்கப்படும். மறுசுழற்சி செய்ய முடியாத 2,600 மெட்ரிக் டன் குப்பைகளை பதப்படுத்தி, சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்புவது எப்படி என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும். 54,000 மெட்ரிக் டன் தேங்காய் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

சிங்கார சென்னை 2.0
மேலும் சென்னை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு உடல்நலக் குறைபாட்டை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். 16,500 நெகிழி குப்பை தொட்டிகள் ரூபாய் 2.90 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில்தான் தான் சென்னையில் இருக்கும் அனைத்து வார்டு கவுன்சிலர்களுக்கும் முக்கியமான அறிவிப்பு ஒன்றை மேயர் பிரியா வெளியிட்டு இருக்கிறார்.

மேயர் பிரியா
அதன்படி சென்னையில் எங்கும் குப்பை இருக்க கூடாது. உங்கள் வார்டு உங்கள் பொறுப்புதான். தினமும் குப்பை அள்ளுவதை நேரில் சென்று உங்கள் வார்டில் நீங்கள்தான் பார்வையிட வேண்டும். கவுன்சிலர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வார்டுக்கு குப்பை அள்ளும் வண்டி வரவில்லை என்றால் உடனே போன் செய்து வரவையுங்கள். மூன்று வேளையும் கொசு மருந்து தெளிக்கப்படுகிறதா என்பதை ஆராயுங்கள்.

கழிவு நீர்
அதேபோல் கழிவு நீர் உங்கள் பகுதியில் தேங்காமல் ஓடுகிறதா, எங்காவது குப்பைகள் சேர்ந்து உள்ளதா என்று ஆராயுங்கள் என்று மேயர் பிரியா கவுன்சிலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். எல்லா கவுன்சிலர்களுக்கும் இது தொடர்பாக தனி தனியாக உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார். அதிகாரிகள் எல்லோரும் களத்தில் இருப்பார்கள். சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் தூய்மை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

உறுதுணை
இதற்கு கவுன்சிலர்கள் உடன் இருந்து உதவி செய்ய வேண்டும். அவர்களுடன் உறுதுணையாக இருந்து நீங்களும் பணிகளை செய்ய வேண்டும் என்று கவுன்சிலர்களுக்கு மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார். சென்னையில் தற்போது தூய்மை படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதை முன்னிட்டு அதிகாரிகள் எல்லா வார்டிலும் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்தான் மேயர் பிரியா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications