ஆடியில் வீசும் அனல் காற்று.. வெளியே தலைகாட்ட முடியலையே.. இன்னும் 4 டிகிரி கூடுமாம்.. அப்போ மழை?
சென்னை: ஆடி மாதத்தில் வீசும் காற்று இதமாய் இருக்கும்.. ஆனால் இப்போதே அக்னியை வாரி இறைப்பது போல உள்ளது. காரணம் சுட்டெரிக்கும் வெயில்தான். இப்போது சூரியன் சுடுவது போதாது என்று இன்னும் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரக்கூடும் என எச்சரிக்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம்.
தென்மேற்கு பருவமழை வட இந்தியாவில் வெளுத்து வாங்கி வருகிறது. எங்கும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. தமிழ்நாட்டிலோ அக்னி நட்சத்திர காலம் போல அனல் காற்று வீசுகிறது. பொதுவாகவே பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனி மாதத்தில் தென்மேற்கு பருவக்காற்று காலம் தொடங்கி விடும். அனல் காற்று குறைந்து தென்றல் காற்று வீசத் தொடங்கும்.

மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் பருவமழை பெய்யத் தொடங்கும். சாரலும் தூறலும் அதிகமாக இருக்கும். குற்றால அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரிக்கும். இந்த ஆண்டு பருவமழை முற்றிலும் மாறுபட்டுள்ளது. அதற்குக் காரணம் வங்கக்கடலில் உருவான புயல்தான். வட மாநிலங்களில் புயல் கரையை கடந்த காரணத்தால் இங்குள்ள ஈரப்பதத்தை முற்றிலும் உறிஞ்சி விட்டதாக வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆடி மாதத்தில் காற்று வீசினால்தான் ஐப்பசியில் அடை மழை இருக்கும் என்று சொல்வார்கள். ஆடியில் காற்று வீசினாலும் தற்போது அனலை வாரி இறைக்கிறது. நெருப்பு துண்டுகளை கொட்டியது போல உள்ளதால் வீட்டை விட்டு வெளியே செல்லவே மக்கள் அச்சப்படுகின்றனர். இதனால் அக்னி நட்சத்திர காலம் போல சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறினாலும் மேகக்கூட்டங்கள் கூட எட்டிப்பார்க்கவில்லை. இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 31.07.2023 மற்றும் 01.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 6ஆம் தேதி வரைக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.












Click it and Unblock the Notifications