கோயம்பேட்டை விடுங்க.. கிளாம்பாக்கத்தால் சென்னை மெட்ரோவுக்கு விழுந்த அடி! அடடே என்ன இப்படி ஆகிடுச்சு
சென்னை: புறநகர் பேருந்து நிலையம் கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், இதனால் சென்னை மெட்ரோவும் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
சென்னையைப் பொறுத்தவரை இத்தனை ஆண்டுகளாக கோயம்பேட்டில் தான் புறநகர் பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. இருப்பினும் இதனால் அங்கே பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், கிளாம்பாக்கத்தில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

நீண்ட தாமதத்திற்குப் பிறகு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து கடந்த ஜன. 1ஆம் தேதி முதல் வெளியூர் பேருந்துகள் படிப்படியாக அங்கே மாற்றப்பட்டன. அதேபோல ஆம்னி பேருந்துகளும் இப்போது அங்கிருந்தே இயங்குகிறது.
கிளாம்பாக்கம்: இப்போது கிளாம்பாக்கத்தில் இருந்து சுமார் 1,000 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல வார நாட்களில் 600 ஆம்னி பேருந்துகளும், வார இறுதி நாட்களில் எண்ணிக்கை 1,000 ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குக் கலவையான விமர்சனங்கள் வந்துள்ள நிலையில், இதனால் சென்னை மெட்ரோவுக்கு வினோதமான ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நாம் பார்க்கலாம்.
கொரோனாவுக்கு பிறகு சென்னை மெட்ரோவில் பயணிப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. வார நாட்களில் மட்டுமின்றி வார இறுதி நாட்கள், பண்டிகை காலங்களிலும் கூட மெட்ரோ ரயில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தே வந்தது. ஆனால் இப்போது திடீரென சென்னை மெட்ரோ பயணிகள் எண்ணிக்கை சுமார் 6000 வரை குறைந்துள்ளதாம். புறநகர் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டதே இதற்குக் காரணம் என்கிறார்கள் அதிகாரிகள்.
சென்னை மெட்ரோ: டிசம்பர் 2023 உடன் ஒப்பிடும்போது, ஜன, 2024ல், மாதாந்திரப் பயணிகளின் எண்ணிக்கை, 6,000 வரை குறைந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும், இது குறிப்பிடத்தக்க அளவு குறைவு இல்லை என்ற அதிகாரிகள், வரும் காலங்களில் இது மேலும் குறைய வாய்ப்பு இல்லை என்னும் தெரிவித்தனர்.
பொதுவாக மாலை நேரத்தில் சென்னையில் டிராபிக் பாதிப்பு உச்சத்தில் இருக்கும் நிலையில், மக்கள் பொதுவாக மெட்ரோ மூலம் கோயம்பேடு வந்து அங்கிருந்து வெளியூர் பேருந்துகளைப் பிடிப்பார்கள். அதேபோல வெளிநாடுகள் அல்லது வெளி மாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வரும் பயணிகள் ஏர்போர்ட்டில் இருந்து நேரடியாக மெட்ரோ மூலம் கோயம்பேடு வந்து, அங்கிருந்தும் சொந்த ஊர்களுக்குக் கிளம்புவார்கள். இந்த பயணிகள் எண்ணிக்கை தான் இப்போது குறைந்துள்ளது.
அதிகாரிகள் சொல்வது என்ன: இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், "கோயம்பேட்டில் பேருந்து நிலையம் இருந்த போது, நான் மெட்ரோ மூலம் அங்குச் செல்வேன். டிராபிக் எவ்வளவு இருந்தாலும் மெட்ரோ மூலம் என்னால் வேகமாகச் சென்றடைய முடிந்தது. ஆனால், இப்போது கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையமும் இல்லை. மெட்ரோ நிலையமும் இல்லை. பேருந்து அல்லது கார் மூலம் மட்டுமே செல்ல வேண்டி இருக்கிறது. இது கொஞ்சம் சிரமமாகவே இருக்கிறது" என்கிறார்கள்.
தற்போது, சென்னை மெட்ரோவில் தினசரி பயணிப்போர் எண்ணிக்கை சராசரியாக 2.73 லட்சமாக உள்ளது. கொரோனாவுக்கு முன்பு சராசரி பயணிகள் எண்ணிக்கை 1.16 லட்சமாக இருந்த நிலையில், இப்போது அது இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications