சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு.. தொழில்நுட்ப கோளாறால் பயணிகள் கடும் அவதி! அலைமோதும் கூட்டம்
சென்னையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் இயக்குவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
சென்னை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை சென்ட்ரல்-விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் இயங்கும் மெட்ரோ ரயில்கள் ஆலந்தூர் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படுவதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொழில்நுட்ப கோளாறால் மெட்ரோ ரயில்கள் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை மட்டுமே இயக்கப்படுவதால் குறித்த நேரத்தில் மக்கள் எங்கும் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் மக்கள் பயணிக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதனால் நாள்தோளும் மெட்ரோ ரயில்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தற்போது சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை விம்கோ நகரில் இருந்து அண்ணா சாலை வழியாக விமான நிலையம் வரையும் (நீலநிற வழித்தடம்), சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் வரையும்(பச்சை நிற வழித்தடம்) மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தொழில்நுட்ப கோளாறு
இந்த மெட்ரோ சேவையில் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் முக்கிய இடமாகும். இந்நிலையில் இன்று காலையில் வழக்கம்போல் மெட்ரோ ரயில் சேவைகள் துவங்கின. இந்நிலையில் தான் சென்னை சென்ட்ரல் -விமான நிலையம் இடையேயான ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் மெட்ரோ ரயில்கள் இயக்குவதில் பிரச்சனை உருவானது. இந்த பிரச்சனையில் மெட்ரோ ரயில் இயக்கங்கள் பாதிக்கப்பட்டது.

நிறுத்தப்பட்ட ரயில்கள்
சென்னை சென்ட்ரல்-விமான நிலையம் வழித்தடத்தில் இயங்கிய மெட்ரோ ரயில்கள் ஆலந்தூருடன் நிறுத்தி வைக்கப்பட்டன. அங்கிருந்து நங்கநல்லூர் சாலை, மீனம்பாக்கம், விமான நிலையம் வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவில்லை. ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் பயணிகள் அங்கிருந்து மாறி செல்கின்றனர். இதனால் பயணிகள் சிரமப்பட்டனர். காலை நேரம் என்பதால் பலரும் தங்கள் பணிக்கு தாமதமாக செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.

30 நிமிடங்களுக்கு ஒருமுறை
மேலும் மெட்ரோ ரயில்கள் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. காலை 8.30 மணிக்கு இந்த பிரச்சனை ஏற்பட்ட நிலையில் காலை 11 மணி வரை தொழில்நுட்ப கோளாறு என்பது சரிசெய்யப்படவில்லை. இந்த பிரச்சனையால் நீலநிற வழித்தடத்திலும் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் மெட்ரோ ரயில்களில் பயணிக்க வந்தவர்கள் வேறு வழியின்றி நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் அதிகளவில் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

கோளாறை சரிசெய்யும் பணி தீவிரம்
இந்த தொழில்நுட்ப கோளாறுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது. இதுபற்றி அந்த நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்ட்ரல் மற்றும் விமான நிலையத்திற்கு இடையேயான மெட்ரோ ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப குழு பிரச்சனையை சரிசெய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது. விமான நிலையம் செல்லும் பயணிகள் ஆலந்தூரில் இறங்கி மாறி செல்ல வேண்டும் என அறிவுறுத்துகிறோம். சிரமத்துக்கு மன்னிக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளது. தற்போது தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications