சென்னை மக்களுக்கு தலைவலியாக மாறிய யூடர்ன்கள்.. அதுவும் அண்ணா சாலை தான் ஹைலைட்
சென்னை: சென்னையில் யூடர்ன்களால் மக்கள் படும் அவஸ்தைகளை ஒரே வார்த்தையில் சொல்லிவிட முடியாது. அண்ணா சாலையிலும், வேளச்சேரியிலும் உள்ள சிக்கலான யூடர்ன்களால் வாகன ஓட்டிகள் நிறையவே அவஸ்தை படுகிறார்கள்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்தை தடுக்கவும் பல்வேறு இடங்களில், போக்குவரத்து போலீசார் யூடர்ன் வைத்திருக்கிறார்கள். சில இடங்களில் கண்டிப்பாக யூடர்ன் எடுத்தாக வேண்டும் என்ற நிலையில், அங்கு யூடர்ன் வைக்காமல் வேறு இடத்தில் வைத்திருக்கிறார்கள். அப்படி செய்வதற்காக சில இடங்களில் பாதைகளையும் மூடிவிட்டனர். அப்படிப்பட்ட இடங்களை பற்றி பார்ப்போம்.

சென்னை அண்ணா சாலையில் ஸ்பென்சர் பிளாசா அருகே புதியயூ' வளைவினை போக்குவரத்து போலீசார் உருவாக்கி உள்ளனர். இதன்படி அண்ணா சாலையில் சென்ட்ரலில் இருந்து, அண்ணா மேம்பாலம் நோக்கிச் செல்லும் வழியில் எல்ஐசியை தாண்டி ஸ்பென்சர் பிளாசா சந்திப்பில் 'யூ' வளைவு எடுத்து வலதுபுறம் திரும்பி மீண்டும் அண்ணா சாலை வழியாக சென்ட்ரல் நோக்கிச் செல்ல வழிவகை செய்துள்ளார்கள்.
ஆனால் உண்மையில் யூ' வளைவில் வலதுபுறம் திரும்பாமல் நேராகச் சென்றால் தாஜ் கன்னிமாரா ஓட்டல் அருகே உள்ள சாலை மூலம் எழும்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் எளிதாக செல்ல முடியும். போக்குவரத்து போலீஸார், அதனை தடுப்பு வேலிகள்மூலம் அடைத்துவிட்டு, அதிலிருந்து 100 மீட்டர் தொலைவில் புதிய யூ' வளைவை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். இதனால் மிகவும் குறுகிய அந்தவளைவில் வாகன ஓட்டிகள் திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள்.
இது ஒருபுறம் எனில் அண்ணா சாலை, கவர்னர் மாளிகை அருகே வேளச்சேரி சந்திப்பு சிக்னலால் பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனை அடைத்துவிட்டு அவர்களை அண்ணாசாலையில் சென்று யூடர்ன் அடிக்க சொன்னால் போக்குவரத்து நெரிசலும் வராது, சிக்னலும் அந்த இடத்தில் தேவைப்படாது என்கிறார்கள் பொதுமக்கள்.
இதேபோல் ஸ்பென்சர் பிளாசா அருகே நடு சாலையில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால் அண்ணா சாலை வழியாக அண்ணா மேம்பாலம் செல்லும் வாகனங்கள் வழக்கமான வேகத்தில் செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். தேவையற்ற போக்குவரத்து நெரிசல் தடுப்புகளால் ஏற்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
வேளச்சேரியில் பீனிக்ஸ் மால் அருகே வேளச்சேரி பைப்பாஸ் சாலை பகுதியில் யூடர்ன் அடிப்பது எளிது. ஆனால் அந்த இடத்தில் யூடர்ன் இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் நீண்ட தூரம் சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது. இதேபோல் வேளச்சேரி பள்ளிக்கரணை மெயின் ரோட்டில் பாலாஜி நகரில் கைவேலியை தாண்டினால், அதற்கு பிறகு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கிராஸிங் நீக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டு கிலோ மீட்டர் தூரம் சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது. கிராஸிங் உள்ள பாலாஜி நகர் மிக குறுகிய இடம் என்பதால் மக்கள் ஒருவழிப்பாதையில் செல்லும் நிலை உள்ளது.
இதேபோல் வேளச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சில்க்ஸ் அருகில் உள்ள இடத்தில் திரும்பினால் எளிது. ஆனால் அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் நீண்ட தூரம் சுற்றி செல்லும் நிலை உள்ளது.
மேடவாக்கம், பள்ளிக்கரணை சந்திப்பிலும் மெட்ரோ ரயில் பணி காரணமாக மக்கள் மாடம்பாக்கம் சாலையில் செல்ல 1.5 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மெட்ரா உள்பட பல்வேறு காரணங்களால் இப்படி சிக்கலான நிலை உள்ளது.












Click it and Unblock the Notifications