கடும் நடவடிக்கை பாயும்.. லாரி உரிமையாளர்களுக்கு சென்னை குடிநீர் வடிகால் வாரியம் எச்சரிக்கை
சென்னை: சென்னையில் கழிவுநீரை கொட்டிய லாரி உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை குடிநீர் வடிகால் வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சாலையோரங்களில் அல்லது ஏரிகளில் கழிவுநீரை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
சென்னையில் ஒரு சில கழிவு நீர் லாரிகள் கண்ட இடங்களில் கழிவுநீரை திருட்டுத்தனமாக கொட்டிவிட்டு செல்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதையடுத்து அப்படி கழிவு நீரை கொட்டிச்செல்லும் லாரிகளை பிடித்து அவ்வப்போது சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்கிறார்கள்.

எனினும் அதையும் மீறி கழிவு நீரை ஆற்றுப்பகுதிகள், ஏரிகளில், தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் திருட்டுத்தனமாக லாரி ஓட்டுநர்கள் சிலர் கொட்டிச் செல்வதால் அந்த பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றன. அப்படி திருட்டுத்தனமாக கழிவு நீரை கொட்டிய லாரி உரிமையாளருக்கு சென்னை மாநகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "குடிநீர் வாரியத்தின் மண்டலம் 14 மற்றும் 15-க்கு உட்பட்ட கழிவுநீர் மேலாண்மை கண்காணிப்பு படைகள் ஒருங்கிணைந்து மாம்பாக்கம் சாலையில் திடீர் ஆய்வுப் பணிகள் மேற்கொண்டன. அப்போது டிஎன் 19 எல் 8365 எனும் பதிவெண் கொண்ட தனியார் லாரியில் இருந்து சிட்லபாக்கம் ஏரி அருகே சட்டவிரோதமாக கழிவுநீர் வெளியேற்றப்பட்டது கண்டறியப்பட்டது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட லாரி உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் செப்டிக் டேங்க் கழிவுகளை மனிதர்கள் அகற்றக்கூடாது. செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்றும் வாகனங்கள் உரிமம் பெற்றிருக்கவேண்டும். அவ்வாறு , உரிமம் பெற்ற வாகனங்களை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டிருந்த அறிவிப்பினை பாருங்கள்..

வீடுகளில் உள்ள செப்டிக் டேங்க் மற்றம் கழிவுநீர் பாதையை சுத்தம் செய்ய தனி நபரை நியமனம் செய்வது சட்ட விரோதமானது. ஒரு கட்டிடத்தில் செப்டிக் டேங்க் மற்றும் கழிவு நீர் பாதையை சுத்தம் செய்யும் போது, சுத்தம் செய்யும் நபர் மரணம் அடைந்தால் அதற்கு வீட்டு உரிமையாளர், கட்டிட உரிமையாளர், நிறுவனம் மற்றும் ஒப்பந்ததாரர் தான் பொறுப்பு.
சுத்தம் செய்யும் நபர் மரணம் அடைந்தால் வீட்டு உரிமையாளர், கட்டிட உரிமையாளர், நிறுவனம் மற்றும் ஒப்பந்ததாரர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மரணம் அடைபவரின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு தொகையை செலுத்த வேண்டும். கழிவு நீர் பாதை மற்றும் செப்டிக் டேங்குகளை இயந்திரம் கொண்டுதான் சுத்தம் செய்ய வேண்டும். இது தொடர்பாக புகார்கள் 14420 என்ற எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல் கழிவுநீர்களை கண்ட இடத்தில் கொட்டக்கூடாது. அதை பாதுகாப்பான முறையில் அதற்கு என்று அரசு அறிவித்த இடங்களில் அதற்கான வழிமுறைகளில் மட்டுமே அகற்ற வேண்டும்.












Click it and Unblock the Notifications