45 வயசில் விபச்சாரத்தில் ஈடுபட்டு.. யாரிந்த மயிலாப்பூர் நபர்? 6 பெண்களை மீட்ட சென்னை போலீஸ்.. சபாஷ்
சென்னை: அனுமதியின்றி முறைகேடாக செயல்பட்டு வரும் மசாஜ் சென்டர்களில், பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு கிடைக்கும் ரகசிய தகவலின் அடிப்படையில், தொடர் ரெய்டுகளும், கைதுகளும் நடந்து வருகின்றன.. அந்தவகையில், இன்றுகூட சென்னை போலீசார், மயிலாப்பூரில் அதிரடி சோதனையை நடத்தியிருக்கிறார்கள்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், முறையான அனுமதி இல்லாமல், லைசென்ஸ்களை புதுப்பிக்காமல், ஸ்பா என்ற பெயரில், மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகின்றன.. இங்கெல்லாம் விபச்சாரங்கள் நடப்பதும் பெருகி வருகின்றன.

கிராமப்புறங்களிலிருந்து ஏராளமான இளம்பெண்கள், வேலை தேடி நகர்ப்புறத்துக்கு வரநேரிடுகிறது.. அதேபோல, சினிமா, டிவி சீரியல்களில் வாய்ப்பு தருவதாக சொன்னதை நம்பி ஏமாந்த பெண்களும், குடும்ப சூழ்நிலை, வறுமை போன்ற நெருக்கடிகளுக்கு ஆளாகும் பெண்களும், இதுபோன்ற உரிமம் பெறாத மசாஜ் சென்டர்களில் வந்து பாலியல் தொழிலில் சிக்கிவிடுகிறார்கள். இதில் பல வெளிமாநில பெண்களும் அடக்கம்.
மசாஜ் சென்டர்: எனவேதான், தமிழ்நாடு முழுவதும் போலீசார் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு, சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டர்களில் விபச்சாரம் நடப்பது உறுதியானால், அவர்களை தயவு தாட்சண்யம் பார்க்காமல் கைது செய்து வருகிறார்கள். கடந்த வாரம்கூட, 2 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்திருந்தது.
இந்நிலையில், மயிலாப்பூர் பகுதியில் உள்ள ஸ்பாவில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தப்பட்டிருக்கிறது.. இதுகுறித்து தகவலறிந்த போலீசார், நேரடியாகவே சம்பந்தப்பட்ட ஸ்பாவுக்குள் நுழைந்து, 6 பெண்களை பத்திரமாக மீட்டிருக்கிறார்கள்.
பாலியல் தொழில்: இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை பெருநகர காவல், மயிலாப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் நேற்று (10.02.2025) மாலை, மயிலாப்பூர், சிஐடி காலனி, பிஷப் வாலர்ஸ் அவென்யூ (தெற்கு) பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு ஸ்பாவை கண்காணித்தபோது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது.
அதன்பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் மேற்படி ஸ்பாவில் சோதனைகள் மேற்கொண்டு, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய ஸ்பா சென்டரின் உரிமையாளர் சென்னை எம்ஜிஆர் நகர் சுப்பிரமணி மகன் கணேஷ்குமார் (45) என்பவரை கைது செய்தனர். மேலும், மேற்படி இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த தங்க வைத்திருந்த 6 பெண்கள் மீட்கப்பட்டனர்.
பத்திரமாக மீட்பு: கைது செய்யப்பட்ட எதிரி கணேஷ்குமார் விசாரணைக்குப் பின்னர் நேற்று (10.02.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட 6 பெண்கள் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்" என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications