திடீரென பிங் நிறத்தில் மாறிய பள்ளிக்கரணை ஏரி! ஓரே ஆண்டில் 2ஆவது முறை- மிரண்ட பொதுமக்கள்! என்ன காரணம்
சென்னை: தலைநகர் சென்னையில் சுற்றுச்சூழல் சீர்கேடு பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், பள்ளிக்கரணை ஏரி நிறம் மாறியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
சுற்றுச்சூழல் சீர்கேடு என்பது இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகிற்கும் பெரும் பிரச்சினையாகவே உருவெடுத்துள்ளது. இதனால் கடும் வெயில், பருவம் தவறிப் பெய்யும் மழை என பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.
சுற்றுச்சூழலை மேம்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்குத் தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பெரியளவில் ஒத்துழைப்பு அளிப்பதில்லை. இதனால் சுற்றுச்சூழல் சீர்கேடு தொடர்கதையாகவே உள்ளது.

நிறம் மாறிய ஏரி
தலைநகர் சென்னை சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஒரு காலத்தில் சதுப்புநிலமாக இருந்து பள்ளிக்கரணை மாசுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கரணை சதுப்புநிலம் அருகே இருந்த ஏரி இப்போது திடீரென பிங் நிறத்தில் மாறியுள்ளது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

குப்பை கிடங்கு
பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் ஒரு பகுதி ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு குப்பைக் கிடங்காக மாற்றப்பட்டது. அங்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி பயோ கழிவுகள், மருத்துவ கழிவுகள், ரசாயன கழிவுகள் என அனைத்துக் கழிவுகளும் அங்குக் கொட்டப்படுகிறது. இதனால் அங்கு மீத்தேன் உற்பத்தியாகி, அவ்வப்போது குப்பைக் கிடங்கில் தீ விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.

என்ன காரணம்
பள்ளிக்கரணை அருகே உள்ள இந்த ஏரியில் பாசிகள் அதிகமானதே இதற்குக் காரணம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஏரியில் சயனோபாக்டீரியாவின் வளர்ச்சியால், நீர் பிங்க் நிறத்தில் மாறி உள்ளதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோக்களில் ஏரி எந்தளவு பிரகாசமான பிங்க நிறத்தில் மாறியுள்ளது என்பதை ஒருவர் பார்க்கலாம்.

டெஸ்ட்
இதையடுத்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் ஏரியில் இருந்து மாதிரிகளைச் சேகரித்துச் சென்றனர். ஆக்ஸிஜன் குறைந்தது, மீத்தேன் கசிவு உள்ளிட்ட காரணங்களால் சயனோபாக்டீரியா உருவானதே இதற்குக் காரணம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதேநேரம் இந்த பிங் நிறுவனம் சிவப்பு பைகோரித்ரின் காரணமாகக் கூட ஏற்பட்டு இருக்கலாம் என்றும் எதையும் சோதனை முடிவுகள் வந்த பிறகே உறுதியாகக் கூற முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாசிகள்
பைகோரித்ரின் என்பது சிவப்பு பாசிகள் அந்த நிறத்தில் இருக்க காரணமாக இருப்பதாகும். இது நீல ஒளியில் இருந்து ஆற்றலை உறிஞ்சி சிவப்பு நிறத்தை வெளியே உமிழ்கிறது. பொதுவாக இவை ஆழமான நீரில் தான் இருக்கும். ஒரே ஆண்டில் பள்ளிக்கரணை ஏறி இதுபோல பிங் நிறத்தில் மாறுவது இது இரண்டாவது முறை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அச்சம்
இது அப்பகுதி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சயனோ பாக்டீரியாக்கள் மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியிடும். எனவே, நிறம் மாற சயனோ பாக்டீரியாக்கள் காரணம் என்றால் அது தங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர். இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்களும் மூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
