பெருங்குடியில் சபாஷ்.. சுழன்ற ஆபிசர்ஸ்.. ஒரு தெருவையும் விடலையே.. 50 ஏக்கர் நிலமா? சென்னையே நிமிருது
சென்னை: சென்னை பெருங்குடியில், பயோமைனிங் முறையில் குப்பைகளை பிரித்தெடுத்து, 50 ஏக்கருக்கு அதிகமாக நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், 180-வது வார்டு, திருவள்ளுவர் நகர் முதல் மற்றும் 2-வது அவென்யூவில் நடைபெற்று வரும் சாலை மற்றும் நடைபாதை பணிகளை, ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்..

அதிகாரிகள்: திருவான்மியூர் கடற்கரை சாலையில் நடந்து வரும் நடைபாதை பணி, கடற்கரையையும் பார்வையிட்டார். அப்போது, கடற்கரையில் குப்பை தொட்டிகள் அதிகம் இல்லாததை கண்டு, கூடுதலாக குப்பை தொட்டிகளையும், அதற்கான அறிவிப்பு பலகைகளை வைக்க அதிகாரிகளிடம் சொன்னார். பிறகு அங்கிருந்த வியாபாரிகளிடமும் கடை முகப்பில் குப்பை தொட்டிகளை வைக்க சொன்னார்.
பிறகு, பெருங்குடி மண்டலம், வார்டு-184, மாநகராட்சி சாலையில் ரூ.10.8 கோடியில் நடந்து வரும் கான்கிரீட் சாலை பணியை விரைந்து முடிக்குமாறு கேட்டுக்கொண்டார். அங்குள்ள அம்மா உணவகத்தின் செயல்பாடுகள் குறித்தும், சீரமைப்பு மற்றும் அழகுபடுத்தும் பணியையும், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் குப்பை பிரித்தெடுக்கும் பணியையும் ஆய்வு செய்தார்.. ரூ.10 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிமென்ட் கான்கிரீட் சாலை பணியை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வுகள்: இந்த ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன்: "கொடுங்கையூர் குப்பை கொட்டும்வளாகத்தில் 62 லட்சம் டன் குப்பையும், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் 32 லட்சம் டன் குப்பையும் சேர்ந்துள்ளது.
இதில் பெருங்குடியில் சுமார் 24 லட்சம் டன் குப்பையோ மைனிங் முறையில் பிரித்தெடுக்கப்பட்டு, 50 ஏக்கருக்கு மேலான நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. கொடுங்கையூரிலும் இதுபோன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பேட்டரிகள்: ஒரு நாளைக்கு ஒரு நபரால் 700 கிராம் குப்பை உருவாகிறது. இது சென்னையில் நாளொன்றுக்கு 6300 டன் குப்பையாக சேருகிறது. இந்த குப்பை தான் பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் மூலம் வீடுகள்தோறும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு, தரம் பிரிக்கப்பட்டு குப்பை மாற்று நிலையங்களுக்கு சென்று, பிறகு குப்பை கொட்டும் வளாகத்திற்கு வருகிறது. இது மிகப்பெரிய சவாலாக உள்ளது.
இது நம் குப்பை என்பதையும், இதற்காக மாநகராட்சியில் பல்வேறு நிலையில் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்பதையும் பொதுமக்கள் உணர வேண்டும். சாதாரண குப்பை என்று கருதும் நிலையில், குப்பையிலே பணியாற்றக்கூடிய கடமையில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.. அதனால், பொதுமக்களாகிய நீங்கள் குப்பைகள் உருவாவதைக் குறைக்க முடியும், குப்பையை முறையாக தரம் பிரித்து கொடுக்க முடியும்.
குப்பை தொட்டி: குப்பையை குப்பை தொட்டியில் மட்டுமே கொட்ட வேண்டும். இதை பொதுமக்கள் நினைத்தால் செய்ய முடியும். கோவில்கள் மற்றும் ஆலயங்கள் போன்ற பல்வேறு இடங்களுக்கு பொதுமக்கள் செல்லும் போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்வதைக் குறைக்க வேண்டும்.
அடுத்த 2 மற்றும் 3 வருஷங்களிலாவது, இந்த குப்பை கொட்டும் வளாகங்களில் உள்ள குப்பைகள் முழுவதுமாக அகற்றப்பட்டு, மிகவும் குறைவான அளவிலான குப்பைகளை குப்பை கொட்டும் வளாகங்களுக்கு வரக்கூடிய நிலையை உருவாக்குவதற்கான முயற்சியில் தான் இதுபோன்ற பெரிய திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன..
அறிவுறுத்தல்: பயோ கேஸ் தயாரித்தல், பிளாஸ்டிக் பொருட்களை சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்புதல், பிற பொருட்களை கொண்டு பயன்படக்கூடிய பொருட்கள் தயாரித்தல் போன்றவைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதை உணர்ந்து குப்பையை வகைப் பிரித்து வழங்க வேண்டும்" என்றார் ஆணையர் ராதாகிருஷ்ணன்.












Click it and Unblock the Notifications