கர்ப்பிணி பெண்ணை ஏற்றி வந்த ஆட்டோ! நள்ளிரவில் நிறுத்தி ரூ.1500 அபராதம் போட்ட போலீஸ்! சென்னையில் ஷாக்
சென்னை: நள்ளிரவில் ஆட்டோவில் கர்ப்பிணியை அழைத்து வந்த டிரைவருக்கு போக்குவரத்து உதவி ஆய்வாளர் 1500 ரூபாய் அபராதம் விதித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைநகர் சென்னையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளில் சென்னை டிராபிக் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இரவு நேரங்களில் இவர்கள் ரோந்து பணிகளையும் மேற்கொள்வார்கள்.
இந்நிலையில், இரவு நேரத்தில் கர்ப்பிணியை அழைத்து வந்த டிரைவரை மடக்கிப் பிடித்து போலீசார் அபராதம் விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பரபர சம்பவம்
பொதுமக்களிடம் போலீசார் கண்ணியமாகவும் மதியாதையாகவும் நடந்து கொள்வதில்லை என்ற புகார் நீண்ட காலமாகவே இருக்கிறது. இந்தச் சூழலில் நள்ளிரவு நேரத்தில் குழந்தை உடன் கர்ப்பிணிப் பெண்ணை ஆட்டோவில் ஏற்றி வந்த டிரைவருக்கு போக்குவரத்து உதவி ஆய்வாளர் 1500 ரூபாய் அபராதம் விதித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவம் பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் அருகே நடந்துள்ளது.

ஆட்டோ
நேற்று முன்தினம் இரவு பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் அருகே செம்பியம் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். இரவு சுமார் 12 மணியளவில் அந்த வழியில் ஆட்டோ ஒன்று வந்துள்ளது. அது ஒரு வழிப் பாதை என்பதால் அந்த ஆட்டோவை போலீசார் நிறுத்தச் சொல்லி உள்ளனர். அந்த ஆட்டோவில் கைக்குழந்தை உடன் கர்ப்பிணிப் பெண் ஒருவர் இருந்துள்ளார்.

அபராதம்
இருந்த போதிலும், அந்த ஆட்டோ ஓட்டுநருக்குப் போக்குவரத்து உதவி ஆய்வாளர் பாலமுரளி 1500 ரூபாய் அபராதம் விதித்து உள்ளார். அபராதத்தைச் செலுத்திவிட்டுச் செல்லுமாறு கூறியுள்ளார். அதற்கு அந்த ஆட்டோ ஒட்டுநர், உள்ளே கர்ப்பிணிப் பெண் குழந்தையுடன் இருப்பதாலும் இரவு நேரத்தில் இந்த வழியாக வந்தேன் என்றும் அவசரமாகச் செல்ல வேண்டும் என்பதால் இந்த ஒரு முறை மன்னித்து விடுங்கள் என்று கேட்டுள்ளார்.

கண்டுகொள்ளாத போலீஸ்
இருப்பினும், இதையெல்லாம் உதவி ஆய்வாளர் பாலமுரளி கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து ஆட்டோ டிரைவரிடம் வாக்குவாதம் செய்த பாலமுரளி, "இது ஓன்- வே.. ஒரு வழி பாதையில் தவறாக வந்ததற்கு 1500 ரூபாய் அபராதம். அதை முதலில் கட்டு" என்று ஆவேசமாகக் கத்துகிறார். இது அனைத்தும் அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகி உள்ளது. மேலும், அந்த உதவி ஆய்வாளர் மது போதையில் இருந்ததாகவும் அந்த ஆட்டோ டிரைவர் கூறி இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.

கர்ப்பிணிப் பெண்
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரவு நேரத்தில் கர்ப்பிணி மற்றும் கைக்குழந்தை உடன் வந்த ஆட்டோவை நடுரோட்டில் நிறுத்தி போலீசார் இப்படி நடந்து கொள்வது பெரிய தவறு என்று நெட்டிசன்கள் சாடி வருகின்றனர். மேலும் இந்த விவகாரத்தில் குறித்து போக்குவரத்து உயரதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

டிஜிபி சைலேந்திர பாபு
மக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று உயர் அதிகாரிகள் வலியுறுத்தினாலும், அதைக் காவலர்கள் கொண்டு கொள்வதில்லை. முன்னதாக இன்றைய தினம் கூட போலீஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் காவலர்கள் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு அறிவுரை வழங்கினார். அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற இறுமாப்புடன் சில காவலர்கள் நடந்து கொள்வதாகவும் இதையெல்லாம் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சைலேந்திர பாபு அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications