விநாயகர் சிலை ஊர்வலம்.. திருவல்லிக்கேணியில் முள்வேலி! பட்டாபிரத்தில் திரை கட்டி மசூதி மறைப்பு!
சென்னை: விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, சென்னையில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று நீர்நிலைகளில் கரைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் பாதுகாப்புக்காக முள்வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல பட்டாபிரத்தில் திரைக்கட்டி மசூதி மறைக்கப்பட்டிருக்கிறது.
நாடு முழுவதும் கடந்த 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டிலும், மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்தன. சென்னையில் மட்டும் சுமார் 1,500 க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்து முன்னணி உள்ளிட்ட பல அமைப்புகள் சார்பாக வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட நிலையில், சென்னை முழுவதும் அதிக அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
சென்னை மாநகர காவல் ஆணையத்துக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் 1,519 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. இதற்காக சென்னை முழுவதும் சுமார் 5,000 மேற்பட்ட போலீசாரும், 2,000க்கும் அதிகமான ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். பட்டினப்பாக்கத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக அதிக அளவில் கொண்டுவரப்பட்டது. எனவே இப்பகுதியில் பாதுகாப்புக்காக மின்விளக்கு கம்பங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பட்டினம்பாக்கம் செல்லும் விநாயகர் சிலைகள், பாதைகளை மாற்றக்கூடாது என திருவல்லிக்கேணியில் போலீசார் முள்வேலிகள் மற்றும் தடுப்பு கம்பிகளை அமைத்திருந்தனர். பட்டினம்பாக்கம் செல்லும் விநாயகர் சிலைகள் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் வந்து, பாரதி சாலை வழியாக இடதுபுறம் திரும்பி பட்டினம்பாக்கத்திற்கு செல்ல வேண்டும். இதுதான் அனுமதிக்கப்பட்ட பாதை. ஆனால் சில இந்துத்துவா அமைப்புகள் இந்த பாதையை மீறி ஐஸ்ஹவுஸ் வழியாக செல்ல முயற்சிகளை மேற்கொள்வார்கள். இதனை தடுக்கவே, வருடா வருடம் இந்த வழியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் போலீசார் அதிக அளவில் ஈடுபடுத்தப்படுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அதேபோல பட்டாபிராம் மேம்பாலத்தின் வழியாக விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. இதற்காக மேம்பாலத்தை ஒட்டி இருக்கும் மசூதியை போலீசார் திரைச்சீலை அமைத்து மறைத்திருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த வழியாக ஊர்வலம் செல்வது வழக்கமாக ஒன்றாக இருப்பினும் இந்த ஆண்டு மட்டும் போலீசார் திரைச்சீலை அமைத்து மசூதியை மறைத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications