5570 கோடியில் துறைமுகம்-மதுரவாயல் இரட்டை அடுக்கு சாலை.. 2027ல் அடையாளமே மாறப்போகும் சென்னை
சென்னை: மதுரவாயல் - சென்னை துறைமுகம் இடையேயான இரட்டை அடுக்கு மேம்பாலப் பாதையின் கட்டுமானப் பணிகள் 2027 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும் என்று நெடுஞ்சாலை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். சென்னை மாநகரத்தின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முக்கியமான இந்த சாலையின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
சென்னைத் துறைமுகம் - மதுரவாயல் விரைவுச்சாலை 19 கிலோமீட்டர் நீளத்திற்கு உயர்மட்ட பாலம் மூலம் அமைக்க கடந்த 2009ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. இது சென்னைத் துறைமுகத்தில் 10ம் எண் வாயிலில் துவங்கி கோயம்பேடு வரை கூவம் ஆற்றின் கரையோரம் ஆகவும் பின்னர், அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலையில் மதுரவாயல் வரை உயர்மட்ட பாலத்திலும் அமைக்க மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில் முடிவு செய்யப்பட்டது.

போக்குவரத்து குறையும்
இச்சாலைத் திட்டம் 1815 கோடி மதிப்பீட்டில் 2009 ஆண்டு திட்டப்பணிகள் துவக்கப்பட்டது. இத்திட்டத்தால் சென்னையில் போக்குவரத்து குறையும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஏனெனில் துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் செல்ல நீண்ட நேரம் ஆனது. இப்போதும் ஒருமணி நேரத்திற்கும் அதிகமான நேரம் ஆகும். பீக் அவர்ஸில் இதைவிட கூடுதல் நேரம் எடுக்கும். அதேநேரம் இந்த புதிய திட்டம் அமலுக்கு வந்தால் மதுரவாயலில் இருந்து துறைமுகம் வருவதற்கு வெறும் 20 நிமிடங்கள் போதும். சல்லுன்னு போய்விட முடியும்.
அதிமுக அரசு மறுப்பு
அதேபோல் கனரக வாகனங்கள் இந்த உயர்மட்ட சாலையில் சென்றுவிடும் என்பதால் சென்னை நகருக்குள்ளும் போக்குவரத்து கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. இச்சாலை கட்டுமானப்பணிகள் 15 விழுக்காடு முடிந்திருந்த நிலையில் 2011 ஆண்டு புதியதாக பொறுப்பேற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசு இச்சாலை திட்டத்தை நிறுத்தியது. நீர்வழிப்பாதையில் சாலை அமைக்க அனுமதிக்க முடியாது என மறுத்துவிட்டது. அதன்பிறகு திட்டம் அப்படியே நின்றது. இந்நிலையில் இந்த திட்டத்தை பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் கொண்டுவர விரும்பியது. இந்த திட்டத்தை செயல்படுத்த அதிக ஆர்வம் காட்டியது. மாநில அரசும் இதற்கும் ஒப்புதல் அளித்தது. அதன்பிறகு மீண்டும் பணிகள் விறுவிறுப்பாக நடக்க தொடங்கியது.
நான்கு கட்ட பணிகள்
19 கிலோமீட்டர் நீளமுள்ள திட்டத்தின் மொத்தச் செலவு சுமார் ரூ. 5,570 கோடி ஆக மதிப்பிடப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) இந்தத் திட்டத்தை நான்கு கட்டங்களாகச் செயல்படுத்தி வருகிறது. மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தால் இந்த திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) முதல் கட்ட பணிகளுக்கு (4.95 கி.மீ) ரூ.1,388.59 கோடி, 2கட்ட பணிகளுக்கு (5.10 கி.மீ) ரூ.1,616.97 கோடி, 3ம் கட்ட பணிகளுக்கு (4.49 கி.மீ) ரூ.1,299.36 கோடி, 4 கட்ட பணிகளுக்கு (6.41 கி.மீ) ரூ.1,205.40 கோடி என பிரிந்து நிதி ஒதுக்கீடு செய்துள்ளது
2027ல் முடிகிறது
முதலில் மே 2026 க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த இந்த திட்டம், பருவமழை போன்ற காரணங்களால் தாமதங்களை சந்தித்தது. அதிகாரிகள் இப்போது காலக்கெடு 2027 ஆக மாற்றப்பட்டுள்ளது. மேலும் சாலை திட்டத்தின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க மாதாந்திர மறுஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. 2027-ம் ஆண்டின் முதல் பாதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாதை எப்படி இருக்கும்
இரட்டை அடுக்கில் உயர்மட்டச் சாலையாக அமைக்கப்படுகிறது. முதல் அடுக்கில் உள்ளூர் வாகனப் போக்குவரத்துக்காக இருக்கும். இரண்டாவது அடுக்கு, நேரடியாக சென்னைத் துறைமுகத்திற்குச் செல்லும் கனரக வாகனங்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பாதையாக அமைக்கப்படுகிறது இந்த பாதையால் துறைமுகத்திற்கான சரக்கு போக்குவரத்து எளிதாகிவிடும்.












Click it and Unblock the Notifications