சென்னையில் பிரபல நகைக்கடையில் 10 வருஷமாக திருடிய ஊழியர்கள்... 250 பவுன் நகைகள் அபேஸ்
சென்னை: தியாகராய நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் கடந்த 10 ஆண்டுகளில் சிறுக சிறுக திருடிய இரண்டு ஊழியர்கள், 250 பவுன் நகை வரை திருடி விற்றது அம்பலமாகி உள்ளது.
சென்னை தியாகராய நகரில் பனகல் பூங்கா அருகே உள்ளது பிரபல தனியார் நகைக்கடை. இங்கு பழைய நகைகளை புதியதாக மாற்றும் பிரிவில், லியோ ஜான், அஞ்சித் ஆகிய இரண்டு ஊழியர்கள் பணியாற்றி வந்தார்கள்.

பொதுமக்கள் கொண்டு வந்து விற்கும் பழைய நகைகளை உருக்கி புதிதாக மாற்றும் பணியினை கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொண்டு வந்துள்ளனர்.
இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் சிறிது சிறிதாக நூதன முறையில் தங்கத்தை திருடி வந்துள்ளதாக தெரிகிறது. இதனை கண்டுபிடித்த நகைக்கடை நிர்வாகத்தினர், இருவர் பற்றியும் சென்னை மாம்பலம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீசார் வந்து லியோ ஜான், அஞ்சித் ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்ததில், பழைய நகைகளை உருக்கி புதிய நகைகளாக மாற்றும் பணியில் ஈடுபட்டபோது சிறிது சிறிதாக நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதுவரை இருவரும் சேர்ந்த 250 பவுன் நகைகள் வரை திருடி விற்றதாக கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து 150 சவரன் நகைகளை கைப்பற்றிய போலீசார், இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications