சென்னையில் விமான நிலையம், தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! பரபரத்த ஜார்ஜ் கோட்டை
சென்னை: சென்னையில் விமான நிலையம், பிரபல தனியார் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செல்போன், கடிதம், இமெயில் மூலம் கடந்த 6 மாதங்களாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அண்மைக்காலமாக பள்ளிகளுக்கும் விமான நிலையங்களுக்கும் அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் சென்னை பப்ளிக் பள்ளி உள்பட 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதுகுறித்து பள்ளி நிர்வாகம் புகாரின் பேரில் போலீஸார் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு வந்து அங்கிருந்த மாணவர்களை பத்திரமாக அனுப்பி வைத்தனர். சில பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல் செய்தியை கேட்ட பெற்றோரே பதறி அடித்துக் கொண்டு பள்ளிகளுக்கு வந்து பிள்ளைகளை அழைத்துச் சென்றனர்.
ஒரு சில பெற்றோர்கள் வேலைக்குச் சென்றுவிட்டதால் குழந்தைகளை அனுப்ப முடியாமல் பள்ளி நிர்வாகம் தவித்தது. பிறகு சில மணி நேரத்தில் அவர்களும் வந்து பிள்ளைகளை அழைத்துச் சென்றுவிட்டனர். பள்ளிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் தேடியதில் அது வதந்தி என தெரியவந்தது. அது போல் அந்த இமெயில் வேறு ஒரு வெளிநாட்டு நெட்வொர்க்கில் இருந்து அனுப்பப்பட்டதால் அவர் யார் என கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டது.
அது போல் சென்னை விமான நிலையத்திலும் 5 க்கும் மேற்பட்ட முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த வகையில் சட்டம் ஒழுங்கு டிஜிபி பெயரில் போலியான ஒரு இமெயில் முகவரியை தொடங்கி ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்த பள்ளிக்கு இத்துடன் 9-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதே போல சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி, மவுன்ட் ராணுவ பள்ளி ஆகியவற்றுக்கும் வெவ்வேறு இமெயில் முகவரிகளில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
அது போல் தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் துறைக்கு மர்ம நபர் கடிதம் எழுதியிருந்தார். வெடிகுண்டு செயலிழக்க செய்யும் நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டை தேடும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் யார் என்பது குறித்து சைபர் கிரைம் போலீஸார் தீவிரமாக தேடி வருகிறார்கள். அது போல் வெடிகுண்டு மிரட்டல்களை யாரும் நம்ப வேண்டாம் என சென்னை காவல் ஆணையர் அருண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications