மேயர், துணை மேயரிடம் சொல்லாமே ஷாக்? சென்னைவாசிகளின் தலையில் இடி என இறங்கிய சொத்து வரி உயர்வு!
சென்னை: சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு புதிய அதிர்ச்சியாக சொத்து வரி உயர்வு வந்துள்ளது. ஏற்கனவே மின்சார கட்டணத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது சொத்து வரி உயர்வால் கலங்கி நிற்கிறார்கள்.
கடந்த 2022-ஆம் ஆண்டு 20 ஆண்டுகளுக்குப் பிறகு 90% வரை சொத்து வரி உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது வீட்டின் பரப்பளவோ அல்லது அமைப்போ மாறாத நிலையிலும் மீண்டும் பல மடங்கு வரி உயர்த்தப்பட்டிருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் சொத்து வரி 1000% உயர்த்தப்பட்டு உள்ளதாக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. சில பேருக்கு 10 ஆயிரம் கட்டிய நிலையில் 70 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது .

முகப்பேரைச் சேர்ந்த ஒருவருக்கு வழக்கமாக வரும் அரையாண்டு வரி தொகை ₹13,000-லிருந்து திடீரென ₹63,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. காரப்பாக்கத்தில் 1,600 சதுர அடி வீடு வைத்துள்ள நபருக்கு ₹895-ஆக இருந்த வரி ₹1,835 ஆக மாறியுள்ளது. அண்ணா நகரை சேர்ந்த ஒருவருக்கு, "வரி உயர்வு 30% முதல் 300% வரை செய்யப்பட்டுள்ளது. முன்னரே எங்களுக்கு அறிவிக்காமல், நிலுவைத் தொகை என்ற பெயரில் கூடுதல் தொகையையும் சேர்த்து அனுப்பியிருப்பது எந்த வகையில் நியாயம்?" என்று கேள்வி எழுப்புகிறார்.
தங்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் கொதித்தெழுந்துள்ளனர். அண்ணா நகர், வேளச்சேரி, நங்கநல்லூர், கோயம்பேடு, அடையாறு, மாதவரம் மற்றும் மயிலாப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இந்த வரி உயர்வு பெரும் சுமையாக மாறியுள்ளது.
மேயர், துணை மேயருக்கே தெரியாமல் நடந்த நடவடிக்கை:
இந்த ஒட்டுமொத்த விவகாரத்திலும் மிக முக்கிய திருப்பமாக அமைந்தது சென்னை மாநகராட்சி மேயர்களின் நிலைதான். இந்த சொத்து வரி திருத்த நடவடிக்கை கவுன்சிலின் கவனத்திற்கோ அல்லது மேயர், துணை மேயர் போன்ற மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்கோ கொண்டு வரப்படவில்லை என்று கூறப்படுகிறது. மாநகராட்சி ஆணையர் இந்த நடவடிக்கையைத் தன்னிச்சையாக எடுத்துள்ளார். தமிழக அரசு போதிய நிதி வழங்கியிருந்தால் மக்கள் மீது இப்படி வரிச் சுமையை ஏற்றியிருக்க வேண்டியதில்லை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றன.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் மேயர், துணை மேயர்களுக்கே தெரியாமல், அதிகாரிகள் மட்டத்தில் தன்னிச்சையாக ஜிஐஎஸ் தரவுகளைக் கொண்டு சொத்து வரியை உயர்த்தி, நிலுவைத் தொகையையும் சேர்த்து நோட்டீஸ் அனுப்பியிருப்பது தற்போது சென்னையில் பெரும் அரசியல் மற்றும் நிர்வாகச் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜிஐஎஸ் சர்வே மூலம் கண்டுபிடிக்கப்பட்ட விலகல்கள்:
இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் வட்டாரங்கள் அளித்த விளக்கத்தில், சென்னையில் பல ஆண்டுகளாகவே கட்டிடங்களின் உண்மையான சதுர அடியை விடக் குறைவாகக் காட்டி வரி செலுத்தப்பட்டு வந்தது. 2019-இல் உலக வங்கி உதவியுடன் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 3 லட்சம் கட்டிடங்களில் மாறுபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது தாராஷா நிறுவனம் மூலமாக செயற்கைக்கோள் படங்கள், ஜிஐஎஸ் (GIS) மேப்பிங் தரவுகள் மற்றும் அரசுத் தரவுத்தளங்களை ஒப்பிட்டு 3.5 லட்சம் கட்டடங்கள் குறைத்து மதிப்பிடப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது,
பாதிக்கப்பட்ட 3.04 லட்சம் குடியிருப்பு உரிமையாளர்களில் 95% பேருக்கு ₹5,000-க்கு குறைவான உயர்த்தப்பட்ட வரியே வந்துள்ளது. இதில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மண்டல துணை ஆணையர்களிடம் முறையிட்டு மறு அளவீடு செய்ய விண்ணப்பிக்கலாம். அவை ஒரு மாதத்திற்குள் சரிசெய்யப்படும், என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications
