நீச்சல் குளமான பூந்தமல்லி மேம்பாலம்.. வடியாமல் நிற்கும் மழைநீர்.. சிரமத்துடன் பயணித்த மக்கள்!
சென்னை: சென்னை பூந்தமல்லி மேம்பாலத்தில் கனமழையால் மழைநீர் தேங்கி இருந்த நிலையில், ஒரு கட்டத்தில் நீச்சல்குளம் போல் மாறியது. மழை நின்றும் நீர் வடியாததால், வாகன ஓட்டிகள் சிரமத்துடன் அப்பகுதியை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் கடந்த 16ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அடுத்தடுத்து இரு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி இருப்பதால், கடந்த 2 நாட்களாக தொடர்ந்து விட்டுவிட்டு கனமழை கொட்டி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இரவு முதல் காலை வரை விடிய விடிய மழை வெளுக்கும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் வார்னிங் கொடுத்துள்ளார். இதனால் மழை வெள்ள முன்னெச்சரிக்கை பணிகளும் தமிழக அரசால் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதேபோல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நேற்று இரவு முதல் இன்று முழுவதும் பெய்த கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை தேங்கி நிற்க தொடங்கியது. குறிப்பாக பூந்தமல்லி பாலத்தில் அதிகளவில் மழைநீர் தேங்கியது. மாலை நேரத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால், அதிகளவு நீர் தேங்கியது. இதனால் பூந்தமல்லி பாலத்தில் பயணித்த வாகன ஓட்டிகள் சிரமங்களை சந்தித்தனர்.
ஒரு கட்டத்தில் அந்தப் பகுதியே ஒரு சிறிய அளவிலான நீச்சல் குளம் போல் மாறிவிட்டது. வாகன ஓட்டிகளுக்கு வேறு வழியில்லாததால், அவ்வளவு மழைநீரிலும் மிகுந்த சிரமத்துடன் கடந்து சென்றனர். தற்போது இரவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி இருக்கும் சூழலில், அப்பகுதியில் மழைநீர் அதிகளவில் தேங்கி நிற்கும் என்று அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications