பார்க்க அவரை போலவே இருக்காரு.. கேஸ் ஷீட்டை வாங்கி, மறுநொடியே ஓடிட்டாரு! பரபர சென்னை அரசு மருத்துவமனை
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் நடந்த சம்பவம் அங்குள்ள டாக்டர்கள், நோயாளிகள் உட்பட அனைவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.. ஏற்கனவே, மார்ச்சுவரி உட்பட பல்வேறு இடங்களில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர், லஞ்சம் வாங்குவதாக புகார்கள் கசிந்தன.. இவைகளை எல்லாம், மருத்துவமனை டீன்கள், ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில், மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி வருகிறார்கள்.
அரசு மருத்துவமனைகள், ஏழை எளிய மக்களுக்கு பெரும் பயனாக இருந்து வருகிறது.. கூலித் தொழிலாளிகள் முதல் மருத்துவ வசதி இல்லாதவர்கள் வரை, இதுபோன்ற அரசு மருத்துவமனைகளே அவர்களுக்கான சிகிச்சையை தந்து கொண்டிருக்கீறது.

எனினும் அரசு மருத்துவமனைகளில், சிலர் பணத்தை பறிப்பதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தபடியே உள்ளன.. குறிப்பாக, அரசு மருத்துவமனை ஸ்கேன் எடுக்கும் மையங்கள், எக்ஸ்ரே எடுக்கும் பிரிவுகள், மகப்பேறு சிகிச்சை பிரிவுகள், பிணவறைகள் போன்றவற்றில் பணிபுரிபவர்கள் பணத்தை பறிப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
கட்டுக்குள் வந்த லஞ்ச புகார்கள்
பிரசவம் சாதாரணமான நடக்க வேண்டுமானால் இதற்கும் நர்ஸுகளுக்கு பணம் தர வேண்டுமாம். இல்லாவிட்டால் சிசேரியன் பண்ணி செலவை இழுப்பார்களாம். நோயாளிகளுக்கு துணையாக வருபவர்கள் மருத்துவமனையில் தூங்கும்போதும் பணம் கறப்பார்களாம்.
இதுகுறித்த புகார்கள் எல்லாம் மருத்துவமனை டீன்களுக்கே சென்றபிறகுதான், இதில் அதிரடி காட்டினார்கள்.. சிசிடிவி கேமராக்கள் முதல் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து, தற்போது லஞ்சம்புழங்குவதை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இப்படிப்பட்ட சூழலில், வினோத சம்பவம் ஒன்று சென்னை அரசு மருத்துவமனையில் நடந்துள்ளது. மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வார்கள்.. அந்தவகையில், எப்போதுமே பரபரப்பாக மருத்துவமனை காணப்படும்..
காப்பீடு திட்டம் இருக்கிறதா
இந்நிலையில், கடந்த 6ம் தேதி,மருத்துவமனைக்கு டாக்டர் போல உடையணிந்து ஒருவர் வந்துள்ளார்.. அங்கே அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளியை, பரிசோதித்துள்ளார்.. பிறகு ஒவ்வொரு நோயாளியிடமும் சென்று, அவர்களது கேஸ் ஷீட்டுகளை சரி பார்த்திருக்கிறார்..
அத்துடன் இல்லாமல், நேரடியாகவே வார்டுகளுக்கு சென்ற, அங்குள்ள சில நோயாளிகளை பரிசோதித்துள்ளார்... அவர்களிடம் சென்று காப்பீடு திட்டம் இருக்கிறதா? என்று கேட்டு பேச்சு தந்துள்ளார்.. பிறகு ஒருகட்டத்தில் பணத்தையும் அவர்களிடம் பெற்றுள்ளார்..
இதேபோல அங்கிருந்த நோயாளிகளை பரிசோதித்து கொண்டே, பணம் கறப்பதில் இறங்கியிருக்கிறார்.. ஒரு நோயாளியை பரிசோதித்தபோது சம்பந்தப்பட்ட நோயாளியின் உறவினர், அவரிடம் விசாரித்திருக்கிறார்.. அப்போதுதான் அவர் போலி டாக்டர் என்பதே தெரிய வந்தது.. ஆனால், அதற்குள் அந்த போலி டாக்டர் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டாராம்.
ஸ்கேன் சென்டர் ரூம்
உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தரப்பட்டது.. போலீசாரும் விசாரணை மேற்கொண்டபோது, அந்த போலி டாக்டர், பலரிடம் பணத்தையும், செல்போனையும் அபகரித்துள்ளது தெரியவந்தது..
அதுமட்டுமல்ல, பெண் நோயாளி ஒருவரை ஸ்கேன் எடுப்பதற்காக, கேன் ரூமுக்குள் அழைத்து சென்றுள்ளார்.. அப்போது அந்த பெண்ணிடம், ஸ்கேன் எடுக்கும்போது நகை போடக்கூடாது எனக்கூறி நகைகளை மொத்தமாக வாங்கிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாராம்.. இந்த நகை குறித்த புகார் தரும்போதுதான், போலி டாக்டர், மற்ற நோயாளிகளிடமும் பணம், செல்போனை பறித்தது தெரியவந்தது.
தங்க நகைகள்
ஸ்கேன் எடுக்க சென்ற பெண்ணிடம் 3 சவரன் தங்க நகை அபகரித்திருக்கிறார்.. இப்போது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.. அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியும் ஆய்வு செய்து வருகிறார்கள்.. ஆனால், அந்த மர்ம நபர் யாரென்று தெரியவில்லை..
அரசு மருத்துவமனையிலேயே இப்படியொரு துணிகரம் நடக்கிறதா? அத்தனை சிசிடிவி கேமராக்கள், செக்யூரிட்டிகள் என அனைத்தும் இருந்துமா இப்படி? என்று பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications