தண்ணீர் இல்லை.. சென்னை அரசு மருத்துவமனை கழிவறைகள் மூடல்.. நோயாளிகள் அவதி
சென்னை: தண்ணீர் பற்றாக்குறையால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பெரும்பாலான கழிவறைகள் நேற்று மூடப்பட்டது. இதனால் நோயாளிகள் மிகவும் அவதி அடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த பலர் கழிவறைக்கு செல்ல முடியாமல் தவித்தனர். சில பெண் கழிப்பறைகள் மட்டுமே திறந்து இருந்ததால் சிறுநீர் பரிசோதனை செய்யா முடியாமல் ஆண் நோயாளிகள் அவதிப்பட்டதை காண முடிந்தது.
பருவ மழை பொய்த்து போனதால் மொத்த தமிழகமும் தண்ணீர் இல்லாமல் தவித்து வருகிறது. குறிப்பாக தலைநகரமான சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரிந்தாடுகிறது. மக்கள் தண்ணீர் இல்லாமல் தங்களது அன்றாட அடிப்படை விஷயங்களை கூட மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அதற்கு சான்று தான் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று நடந்த சம்பவம்.

சென்னையின் முக்கிய அரசு மருத்துவமனையான ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை இருக்கிறது. இந்த மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதேபோல் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
இந்நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும் தற்போது தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால் ஏராளமான கழிப்பறைகள் மூடப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைக்கு சென்னை குடிநீர் வாரிய லாரிகள் மூலம் தண்ணீர் பெறப்படுகிறது.இருந்த போதிலும் மருத்துவமனையின் தண்ணீர் தேவையை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை.
இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் வார்டுகளின் கழிப்பறைகளில் தண்ணீர் வந்தபோதிலும், மருத்தவமனையின் பிரதான கட்டிடங்களான டவர்-1 மற்றும் டவர்-2 ஆகிய அடுக்குமாடி கட்டிடங்களின் தரைத்தளத்தில் ஆண், பெண் நோயாளிகளுக்கு தனித்தனியே கழிப்பறைகள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு உள்ள கழிப்பறைகளில் பல நேற்று மூடப்பட்டு கிடந்தது. குறிப்பாக ஆண் நோயாளிகள் கழிப்பறை மூடப்பட்டு கிடந்தது. இதனால் வெளிப்புற நோயாளிகள் சிறுநீர் பரிசோதனைகள் மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் பல நோயாளிகள் கழிவறைக்கு செல்ல முடியாமல் தவித்ததையும் பார்க்க முடிந்தது.












Click it and Unblock the Notifications