யூடர்ன் மேம்பாலம்.. சென்னை டைட்டில் பார்க், இந்திரா நகர் மக்களே சந்தோஷமான செய்தி வந்தாச்சு
சென்னை: சென்னை ஓஎம்ஆர் சாலையில் இந்திரா நகர் ரயில் நிலையம் அருகில் இரண்டு யு-டர்ன் மேம்பாலங்களில் ஒன்றை அமைக்கும் பணி முடியும் நிலையில் இருக்கிறது. மேம்பாலத்திற்கு வர்ணம் பூசுவதற்கான இறுதிக் கட்டப் பணிகள் அடுத்த 10 நாட்களில் முடியும் என்று தெரிகிறது. இந்த பணிகள் முடிந்தால் யூடர்ன் மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.
சென்னையில் உள்ள வாகன நெருக்கத்திற்கு ஏற்ப சாலைகளை அகலப்படுத்துவது மேம்பாலம் அமைப்பது. ஒருவழிச்சாலைகளை அதிகப்படுத்துவது யூடர்ன்களை உருவாக்குவது, சிக்னல்களை உருவாக்குது போன்ற பணிகளை செய்ய வேண்டி உள்ளது. இதில் பல பணிகள் செய்யப்பட்டு வந்தாலும், வரும் காலத்தில் எந்த அளவிற்கு போக்குவரத்து அதிகரிக்கும் என்பது கற்பனைக்கும் எட்டாத ஒன்று. அதற்கு ஏற்ப சென்னை மற்றும் புறநகர் சாலைகளை மேம்படுத்துவது என்பது மிகவும் சவாலான காரியம் ஆகும்.

இந்த சூழலில் ஐடி காரிடர் பகுதியான சென்னை ஓஎம்ஆர் சாலை அதிகப்படியான வாகன நெருக்கத்தால் அவதிப்பட்டு வருகிறது. ஒரு நாளில் லட்சக்கணக்கான வாகனங்கள் செல்லும் சாலையாக ஓஎம்ஆர் சாலை இருக்கிறது. மூச்சுவிடக்கூட முடியாத அளவிற்கு ஓஎம்ஆர் சாலை இருக்கிறது.
ஓஎம்ஆர் சாலையை பொறுத்தவரை, ஓஎம்ஆர் சாலை மற்றும் ஈசிஆர் சாலை சந்திப்பு மற்றும் டைடல் பார்க் சிக்னல் சந்திப்பு + இந்திரா நகர் சிக்னல் ஆகிய இடங்களை கடக்க 20 நிமிடம் முதல் அரைமணிநேரம் வரை ஆகிறது.பீக் அவர்ஸில் ஏதேனும் சிக்கல் எழுந்தால் போக்குவரத்து நெரிசல் திணறிவிடும்.
இதையடுத்து இந்திராநகர் சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நெடுஞ்சாலை துறை திட்டமிட்டது. இதன்படி டைட்டில் பார்க் மற்றும் இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே சாலையில் போக்குவரத்தை சீராக்கவும், சிக்னல்களில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும் இரண்டு U- வடிவ மேம்பாலங்கள் கட்டப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த பணிகளுக்கு 2019 நவம்பரில் ₹108.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பின்னர், பாலம் அமைக்கும் பணிகள் 2020ம் ஆண்டு ஆரம்பமானது.. இந்த பணிகள் முழுமையாக முடிந்துவிட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் கூறும் போது, மேம்பாலத்தின் மேல் தார் சாலை போடப்பட்டுள்ளது. மேம்பாலத்தில் பெயிண்ட் அடித்தால் பணிகள் முடிந்துவிடும்.. ஆனால் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெயிண்ட் அடிக்கும் பணி தள்ளிபோய் வருகிறது. அடுத்த 10 நாட்களில் பணிகள் முடிய வாய்ப்பு உள்ளது என்றார்கள்.
இந்த பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டால், சிறுசேரியில் இருந்து மத்திய கைலாஷ் நோக்கி செல்லும் வாகனங்கள் உயரமான மேம்பாலம் வழியாக எளிதாக யூடர்ன் செய்ய முடியும். பிறகு, இந்திரா நகர் 2வது அவென்யூ மற்றும் அங்கிருந்து செல்லும் பிற சாலைகளைப் பயன்படுத்தி போக வேண்டிய இடத்திற்கு போக முடியும்.
இதேபோல் டைடல் பார்க் சந்திப்பிற்கு அப்பால் கட்டப்பட்டுள்ள இரண்டாவது மேம்பாலம் டிசம்பர் மாத இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும் என்று தகவலகள் வெளியாகி உள்ளன. மேம்பாலத்தின் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ளன. சர்வீஸ் லேன் மற்றும் ஒருபுறம் சாய்வுதளம் அமைக்கப்பட உள்ளது. சிஎஸ்ஐஆர் சாலையில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த சாலை ரெடியானால் திருவான்மியூரில் இருந்து மத்திய கைலாஷ் செல்லும் வாகன ஓட்டிகள் யூ-டர்ன் எடுக்க பயன்படுத்த வேண்டும். வாகன ஓட்டிகள் இடதுபுறம் திரும்பி மேம்பாலத்தில் ஏறி, உயரமான மட்டத்தில் யு-டர்ன் எடுத்து, டைடல் பூங்காவிற்குச் செல்லும் சாலையில் இறங்கி போக முடியும். இந்த மேம்பாலம் தயாரானால் டைட்டில் பார்க் பகுதியில் உள்ள போக்குவரத்து நெரிசல் அடியோடு குறைந்துவிடும்.. வாகன ஓட்டிகள் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள்.
இந்நிலையில், இந்த யூடர்ன் பாலங்கள் ஒரு புறம் எனில், பாதசாரிகள் சாலையை கடக்க எந்த வழியும் இல்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த சாலை மிகவும் அகலமானது என்பதால் கடப்பது மிகவும் கடினமாக உள்ளது என்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஒருவழிப்பாதையில் தவறாகவே வருவதால் கடக்க முடியாமல் தவிக்கும் மக்கள், பாதசாரிகளுக்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications