தரமான சம்பவம்.. திணறும் பெங்களூர், ஹைதராபாத்.. இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த சென்னை
சென்னை: இந்திய ரியல் எஸ்டேட் சந்தையில் மற்ற பெருநகரங்கள் சரிவைச் சந்தித்து வரும் வேளையில், சென்னை மட்டும் வியக்கத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. சென்னை தொடர்ந்து வீட்டு விற்பனை மார்க்கெட்டில் வளர்ச்சி அடைந்து வருகிறது. மற்ற நகரங்கள் திணறும் நேரத்தில் சென்னை இந்த வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
1 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஆடம்பர வீடுகள் (Premium Housing) விற்பனையில், 2025-ஆம் ஆண்டில் சென்னை 31 சதவீத வருடாந்திர வளர்ச்சியை எட்டி சாதனை படைத்துள்ளது.

விடாமல் வேகமாக வளரும் சென்னை
பிரபல ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவனமான ஜே.எல்.எல் (JLL) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
சாதனை படைத்த சென்னை: முக்கியப் புள்ளிவிவரங்கள்
தேசிய அளவில் வீடுகள் விற்பனை சரிந்துள்ள நிலையில், சென்னையின் புள்ளிவிவரங்கள் ஆச்சரியம் அளிக்கின்றன:
விற்பனை எண்ணிக்கை: 2025-ஆம் ஆண்டில் சென்னையில் மட்டும் 14,837 ஆடம்பர வீடுகள் விற்பனையாகியுள்ளன.
புதிய திட்டங்கள்: புதிய ஆடம்பர வீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் சென்னை 45 சதவீத வளர்ச்சியுடன் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளது (கொல்கத்தா 60 சதவீதத்துடன் முதலிடம்).
சென்னை மற்ற நகரங்களுடன் ஒப்பீடு: மும்பை, பெங்களூரு மற்றும் புனே ஆகிய நகரங்கள் மொத்த விற்பனையில் 63 சதவீதத்தைக் கொண்டிருந்தாலும், வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் சென்னை முன்னிலை வகிக்கிறது.
மாறும் மக்களின் விருப்பம்: அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மவுசு
இது குறித்து ஜே.எல்.எல் நிறுவனத்தின் சென்னை மற்றும் கோவைப் பிரிவின் மூத்த நிர்வாக இயக்குநர் சிவா கிருஷ்ணன் கூறுகையில், "பாரம்பரியமான தனி வீடுகளில் இருந்து நவீன அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சென்னை மக்களின் விருப்பம் மாறியுள்ளது. மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் வசதிகளைத் தேடும் மக்களின் தேவையே இந்த 45 சதவீத விநியோக வளர்ச்சிக்குக் காரணம்," என்றார்.
சென்னை இந்த வளர்ச்சிக்கு என்ன காரணம்?
சென்னையின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான ஆலோசகர்கள், இந்த வளர்ச்சிக்கு மூன்று முக்கியக் காரணங்களைக் குறிப்பிடுகிறார்கள்:
தொழில்துறை வளர்ச்சி: சென்னையில் சர்வதேசத் தொழில் மையங்கள் (GCC) மற்றும் உற்பத்தித் துறையின் அபார வளர்ச்சி.
சென்னை ரியல் எஸ்டேட்
புதிய முதலீடுகள்: வெளிநாடு வாழ் இந்தியர்களின் (NRI) முதலீடு மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினரிடம் பெருகியுள்ள பணப்புழக்கம்.
நிலையான சந்தை: சென்னைச் சந்தை என்பது யூகங்களின் அடிப்படையில் (Speculative) இயங்குவது அல்ல; இது உண்மையான தேவையின் அடிப்படையில் (End-user driven) இயங்குவதால் எப்போதும் நிலையான வளர்ச்சியைப் பார்க்க முடிகிறது.
எளிய வீடுகள் விற்பனையில் சரிவு
ஆடம்பர வீடுகளின் பங்களிப்பு 2024-ல் 53 சதவீதத்திலிருந்து 2025-ல் 63 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே சமயம், 1 கோடி ரூபாய்க்கும் குறைவான மதிப்புள்ள சாதாரண வீடுகளின் விற்பனை 47 சதவீதத்திலிருந்து 37 சதவீதமாகக் குறைந்துள்ளது. கட்டுமான நிறுவனங்கள் தற்போது அதிக லாபம் தரும் ஆடம்பரத் திட்டங்களுக்கே முன்னுரிமை அளிக்கத் தொடங்கியுள்ளன.
தேசிய அளவில் ஒட்டுமொத்த வீட்டு விற்பனை 3 சதவீதம் சரிந்துள்ள போதிலும், சென்னையின் இந்தத் தனித்துவமான வளர்ச்சி தமிழகப் பொருளாதாரத்தின் வலிமையைக் காட்டுவதாகப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications