திரண்டு வந்த எஸ்டிபிஐ கட்சியினர்.. சென்னை ரிசர்வ் வங்கியில் முற்றுகை போராட்டம்.. பரபரப்பு.. ஏன்?
சென்னை: இஸ்ரேலுக்கு ஆதரவு கோரும் அமெரிக்காவின் கோரிக்கையை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று சென்னையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ரிசர்வ் வங்கி முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. முதலில் காசா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது.

தற்போது காசா நகரில் நுழைந்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹமாஸ் தீவிரவாதிகள் உள்பட பொதுமக்களும் பலியாகி வருகின்றனர்.
இந்த போர் விஷயத்தில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளது. இந்தியா போரை கைவிட்டு இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகியவை பேசி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என தெரிவித்துள்ளது. அதேவேளையில் கடந்த மாதம் 7 ம் தேதி இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பின் கொடூர தாக்குதலை பிரதமர் மோடி வன்மையாக கண்டித்து இருந்தார்.
இதற்கிடையே தான் இஸ்ரேலுக்கு ஆதரவு கோரி அமெரிக்காவின் உயர்மட்டத் தலைவர்கள் இந்தியா வருகை தரவுள்ளனர். இதனை கண்டித்தும், அமெரிக்காவின் கோரிக்கையை இந்தியா புறக்கணிக்க வேண்டும். பாலஸ்தீன் மீதான தாக்குதலை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், சென்னையில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் இந்திய ரிசர்வ் வங்கியை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெற்றது.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே எஸ்டிபிஐ கட்சியின் சென்னை வடக்கு மண்டல தலைவர் முகமது ரஷீத் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் கட்சியின் மாநில பொருளாளர் அமீர் ஹம்சா, மாநில செயலாளர் ரத்தினம் மற்றும். சென்னை மண்டலத்திற்குட்பட்ட மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். எஸ்டிபிஐ மாநில செயலாளர் ஏ.கே.கரீம் கண்டன உரையாற்றினார்.

அவர் பேசும்போது; "பாலஸ்தீன் காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஐ.நா. முகாம்கள், மருத்துவமனைகள் மீது கூட இஸ்ரேலால் ஈவு இரக்கமற்ற பேரழிவு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இஸ்ரேலின் தாக்குதல்களை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய வல்லரசு நாடுகள் தவிர்த்து 140க்கும் மேற்பட்ட நாடுகள் இஸ்ரேல் போர் குற்றத்தில் ஈடுபட்டு வருதாக குற்றம் சாட்டியுள்ளன.
மேலும் ஐநா மன்றத்தில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியுள்ளன. இஸ்ரேலின் பின்புலத்தில் இருந்து அமெரிக்கா இந்த இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஐநா உட்பட சர்வதேச நாடுகள் மத்தியில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிர்ப்புகள் வலுத்துவரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவு கோரி அமெரிக்காவின் உயர்மட்ட தலைவர்கள் இந்தியாவின் ஆதரவை கோரி வருகை தரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதன்படி இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு ஆதரவு கோரி அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் இன்று இந்தியா வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலின் போர்க்குற்றத்தை ஊக்குவிக்கும் அமெரிக்காவின் கோரிக்கையை இந்தியா புறக்கணிக்க வேண்டும். நமது பாரம்பரியத்தின்படி பாலஸ்தீனுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்க வேண்டும்" என அவர் வலியுறுத்தினார்.இந்த முற்றுகை போராட்டத்தில் பெண்களும் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications