அடிதூள்! சென்னை மெரினாவுக்கு வருகிறது ரோப் கார்.. அத்துடன் மேயர் பிரியா சொன்ன மற்றொரு முக்கிய தகவல்
சென்னை: நாட்டிலேயே மிகப் பெரிய கடற்கரையாக உள்ள சென்னை மெரினாவில் வரும் காலத்தில் பல சூப்பர் மாற்றங்கள் வர உள்ளது. இதற்கான நடவடிக்கை விரைவில் தொடங்க உள்ளது.
தலைநகர் சென்னையில் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக இருப்பது மெரினா. ஒவ்வொரு ஆண்டும் சென்னை மெரினாவுக்கு பல லட்சம் பேர் வருகை தருகின்றனர்.
இருப்பினும், உலகிலேயே இரண்டாவது மிகப் பெரிய கடற்கரையாக உள்ள மெரினாவுக்கு இன்னும் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை இருந்து கொண்டு தான் இருக்கிறது.

ரோப் கார்
இந்தச் சூழலில் மெரினாவில் சுமார் 3.5 கிமீ தூரத்திற்கு ரோப் கார் திட்டத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகச் சென்னை மாநகர மேயர் பிரியா தெரிவித்து உள்ளார். கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி பெற்று ரோப் கார் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றும் மேயர் பிரியா தெரிவித்தார். இது இங்குள்ள சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி பொதுமக்களுக்கும் பெரியளவில் பயன் அளிக்கும் எனக் கூறப்படுகிறது.

மேயர் பிரியா
இது குறித்து மேயர் பிரியா கூறுகையில், "முதலில் 3.5 கி.மீ., தூரத்திற்கு இந்த ரோப் கார் திட்டம் கொண்டு வரப்படும். இது மற்றொரு போக்குவரத்து முறையாகவும் இருக்கும். வரும் காலங்களில் இது நகரின் பிற பகுதிகளிலும் விரிவுபடுத்தப்படும்" என்றார். இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையைச் சென்னை மாநகராட்சி விரைவில் தயாரித்து, மாநில அரசிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். அதன் பின்னரே அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொரு முக்கிய தகவல்
ரோப் கார் திட்டம் மட்டுமே நடைமுறைக்கு வந்தால் அது மெரினாவுக்கு அதிகப்படியான சுற்றுலா பயணிகளை அழைத்து வரும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. மேலும், இதற்கு ஆதரவு இருந்தால், நகரின் பல பகுதிகளுக்கும் ரோப் கார் முறை அறிமுகப்படுத்தப்படும் என மேயர் பிரியா கூறியதும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இது வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டால் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலும் குறையும்.

பல நடவடிக்கை
மெரினா கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கச் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் தான் இந்த கடற்கரை முழுக்க இலவச இணையைச் சேவையைக் கொண்டு வர உள்ளதாக மாநகராட்சி அறிவித்து இருந்தது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் ஏற்கனவே டெலிகாம் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மிக விரைவில் இந்த சேவை நடைமுறைக்கு வர உள்ளது.

மெட்ரோ பணிகள்
மேலும், மெரினாவில் செயற்கை நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல வசதிகளையும் உழைப்பாளர் சிலைக்கு அருகே கொண்டு வர சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. இப்போது சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள் காரணமாக மெரினாவில் சில முக்கிய பகுதிகளில் பொதுமக்கள் வந்து செல்வதில் சிரமம் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications