நாறிப்போன சென்னை.. தூய்மை பணியாளர்களின் போராட்டத்தால் .. மலைபோல் குவிந்த குப்பைகள்
சென்னை: சென்னையில் தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ரிப்பன் கட்டிடம் முன்பு 8-வது நாளாக தூய்மை பணியார்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் காரணமா 8 வது நாளாக சில பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளது. இதனால் சென்னையே குப்பைமேடாக மாறிவருகிறது. பல பகுதிகளில் நாற்றம் எடுக்க தொடங்கி உள்ளது. அரசு உடனே இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ராயபுரம், திரு.வி.க நகர் ஆகிய இரண்டு மண்டலங்களின் தூய்மைப் பணிகளும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டன. தொடர்ந்து, தண்டையார்பேட்டை, அண்ணா நகர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளையும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இப்படி தூய்மைப் பணியைத் தனியார் நிறுவனத்தின் கீழ் ஒப்படைப்பதைக் கண்டித்து கடந்த 1-ந்தேதி முதல் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தனியார்வசம் தூய்மைப் பணிகளை ஒப்படைப்பதால், அங்கு 16,950 ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குமுறுகிறார்கள் தூய்மை பணியாளர்கள். இனிவரும் நாட்களில் தனியாரிடம் சென்று வேலை பார்க்குமாறு அதிகாரிகள் கூறுவதால், மாநகராட்சியில் பல வருட உழைப்பு வீணாகிவிட்டதாக தூய்மை பணியாளர்கள் கவலையில் உள்ளார். என்றாவது ஒரு நாள் தங்களை அரசு பணி நிரந்தரம் செய்யும் என்ற நம்பிக்கையில் பணியாற்றிய தூய்மை பணியயாளர்கள் இத்தனை ஆண்டுகாலம் வேலை செய்ததற்கு இது தான் பலனா என்று குமுறுகிறார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு காணப்படவில்லை. இந்த நிலையில், 8-வது நாளாக நேற்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை அரசு கண்டுகொள்ளாமலிருப்பது சரியல்ல. உயர் அதிகாரிகள் உடனடியாக இவர்களை சந்தித்து, துய்மை பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன.
இது ஒருபுறம் எனில், தூய்மை பணியாளர்களின் போராட்டம் காரணமாக சென்னையில் குப்பைகள் நிரம்பி வழிந்து நாறிக்கொண்டிருக்கிறது. பல இடங்களில் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன. பல பகுதிகளில் குப்பைகள் சாலைகளில் வீசப்பட்டு உள்ளன. குப்பைகள் சாக்கடைகள் அடைத்துக் கொள்வதும் ஆங்காங்கே அதிகமாக இருக்கிறது. குப்பைகள் ரோடுகளில் மலை போல் குவிந்து கிடப்பதையும் காண முடிந்ததது. மொத்தத்தில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தால் சென்னையே குப்பைகளால் நாறிப்போய் கிடக்கிறது. அரசு உடனடியாக இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது தான் மக்களின் கோரிக்கையான உள்ளது.












Click it and Unblock the Notifications