உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி.. செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்தது அமலாக்கத் துறை
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை முதன்மை நீதிமன்றத்தில் அனுமதி அளித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக அதிமுக ஆட்சியில் இருந்த போது வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. அந்த புகாரின் பேரில் அமலாக்கத் துறை சட்டவிரோத பணவர்த்தனையின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தது. அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து மேல்சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையிலிருந்து காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம் என அவரது மனைவி ஹைகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது.
இதையடுத்து இந்த வழக்கு 3ஆவது நீதிபதியிடம் சென்றது அவர் செந்தில் பாலாஜி தனது மீது தவறில்லை என்றால் அதை நிரூபிக்கட்டும். அவரது கைது சட்டவிரோதம் அல்ல என தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவருடைய மனைவி மேல்முறையீடு செய்தார்.
அது போல் அமலாக்கத் துறை தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபலும் அமலாக்கத் துறை சார்பில் துஷார் மேத்தாவும் ஆஜராகி தங்கள் வாதத்தை முன் வைத்தனர். செந்தில் பாலாஜியை தனிப்பட்ட முறையில் காவலில் எடுத்து விசாரிப்பது முக்கியமானது என அமலாக்கத் துறை தெரிவித்தது.
இந்த வழக்கின் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் போபண்ணா, சுந்தரேஷ் அடங்கிய அமர்வு இன்று உத்தரவு பிறப்பித்தது. அதில் செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது சட்டப்படி சரியானது. குற்றவியல் நடைமுறை சட்டம் 167 இன் படி அமலாக்கத் துறை ஒருவரை கைது செய்யும் போது அந்த நபரை காவலில் வைக்கலாம் என கூறுகிறது. அமலாக்கத் துறை அடுத்த 5 நாட்களுக்கு அதாவது ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்த செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க கோரி அமலாக்கத் துறை சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நீதிபதி அல்லி முன் விசாரணைக்கு வந்த போது, புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, உச்ச நீதிமன்ற உத்தரவின் இணையதள நகலை அமலாக்கத் துறை தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். செந்தில் பாலாஜி தரப்பில், அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்கும் நாட்களில், ஒரு நாளைக்கு இருமுறை காவேரி மருத்துவமனையில் பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமலாக்கத் துறை தரப்பு வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை கூட செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்த கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அதற்கு உச்ச நீதிமன்றம், அமலாக்கத் துறை கவனித்துக் கொள்ளும் என தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
இதையடுத்து, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இதுசம்பந்தமாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனவும், அமலாக்கத் துறையினர், செந்தில் பாலாஜி உடல் நிலையை கவனித்துக் கொள்ள வேண்டும் எனக் கூறி ஆகஸ்ட் 12ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறை வசம் ஒப்படைத்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். பின்னர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications