ஆட்டத்தை அஸ்தினாபுரத்தில் ஆரம்பித்த அதிமுக.. தாம்பரம் மாநகராட்சியில் இப்படி? சென்னையில் ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, மண்டலம்-3, அஸ்தினாபுரம் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால் அப்பகுதி வாழ் மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக, தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.. இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து அதிமுக இன்று ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது. இதுகுறித்த அறிவிப்பையும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் தாம்பரம் மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது.. அப்போது, 2025-26ம் வருடத்துக்கான பட்ஜெட்டை நிதிக்குழு தலைவர் ரமணி ஆதிமூலம் தாக்கல் செய்தார்..

chennai tambaram corporation hasthinapuram

கவர்ச்சி திட்டங்கள் அறிவிப்பு

அதில் ஏராளமான திட்டங்கள், தாம்பரம் மக்களின் கவனத்தை பெற்றிருந்தன.. குறிப்பாக, சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து அடைக்க கால்நடை பவுண்டரிக்கு ஒரு கோடி ரூபாய், மாநகராட்சி பள்ளிகளில் தொழில்நுட்ப வகுப்பு ரோபோட்டிக் வகுப்புகளுக்காக ரூ.50 லட்சம், மகளிருக்காக பூங்கா அமைக்க ரூ.1 கோடி, அறிவியல் பூங்கா அமைக்க 5 கோடி ரூபாய், சண்முகம் சாலையை ஸ்மார்ட் சாலையாக மாற்ற ரூ.10 கோடி, குடிநீர் திட்டத்திற்காக ரூ.27 கோடி உள்ளிட்ட 71 அம்சங்கள் கவனம் பெற்றிருந்தன.


எதிர்க்கட்சி சரமாரி விமர்சனம்

ஆனால், இதனை மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சேலையூர் சங்கர் கடுமையான விமர்சித்திருந்தார். குப்பை அள்ளுவதற்கு பல கோடி ரூபாய் ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டிருந்த நிலையில், துப்புரவு பணி செய்யும் தொழிலாளர்களுக்கு கூட்டி பெருக்குவதற்கு துடைப்பம் கூட இல்லாத நிலையில் தான் தாம்பரம் மாநகராட்சி இருக்கிறது..

மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட தாம்பரத்தில் இந்த 3 வருடங்களில் 30 சதவீதம்கூட பணிகள் முடியவில்லை. வெறும் பட்ஜெட், அறிவிப்புகள் மூலமாக மட்டுமே செயல்பட்டு வருகிறது என்றெல்லாம் சாடியிருந்தார்.

அதிமுக ஆர்ப்பாட்டம்

இந்நிலையில்தான், தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து இன்று அதாவது 11-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் விடுத்துள்ள அறிக்கையில் உள்ளதாவது:

நிர்வாகத் திறனற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கடந்த 4 ஆண்டு கால திமுக ஆட்சியில், தமிழக மக்கள் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தராமல், திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. இதற்கெல்லாம் விடிவுகாலம் விரைவில் வர உள்ளது.

அஸ்தினாபுரம் பகுதி மக்கள்

குறிப்பாக, தாம்பரம் மாநகராட்சி, மண்டலம் 3, அஸ்தினாபுரம் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால், அப்பகுதி வாழ் மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக, தொடர்ந்து புகார்கள் வருகின்றன. அவர்களின் நிலத்தடி நீருக்கு ஆதாரமாக விளங்கி வரும் புத்தேரியில் கழிவுநீர் கலப்பதால், சுற்று வட்டாரங்களில் நிலத்தடி நீர் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதோடு, அதை பயன்படுத்தும் பொதுமக்கள் தோல் வியாதிகள் உள்ளிட்ட எண்ணற்ற சுகாதார சீர்கேடுகளால் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்.

பொதுமக்கள் ஒன்று கூடி அகற்றிய பின்னரும், ஆளுங்கட்சியின் அலட்சியத்தால் நெமிலிச்சேரி ஏரி மீண்டும் ஆகாயத் தாமரை கொடிகளால் சூழப்பட்டு, கழிவுநீர் குட்டையாக மாறியுள்ளது. பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முறையாக மேற்கொள்ளாததால், பெரும்பாலான இடங்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ஆறுபோல் சாலைகளில் வழிந்தோடுகிறது.

குரோம்பேட்டை, தாம்பரம்

குரோம்பேட்டை கணபதிபுரம் சுடுகாடு எவ்வித பராமரிப்பும் இல்லாமல், தகன மேடையின் மேற்கூரை எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. அஸ்தினாபுரத்தில் நாள்தோறும் 5 சிற்றுந்துகள் இயங்கி வந்த நிலையில், தற்போது ஒரே ஒரு சிற்றுந்து மட்டுமே இயக்கப்படுவதால் ஏழை, எளிய மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

தாம்பரம் மாநகராட்சி, மண்டலம் 3-ல் நிலவி வரும் பல்வேறு நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், அஸ்தினாபுரம் பகுதி சார்பில்,11-ம் தேதி மாலை 4 மணியளவில், ஜமீன் ராயப்பேட்டை, ஸ்ரீபடவேட்டம்மன் கோயில் சந்திப்பு அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டம் அதிமுக அமைப்புச் செயலாளர் டி.ஜெயக்குமார் தலைமையிலும், செங்கல்பட்டு மேற்கு மாவட்டச் செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் முன்னிலையிலும் நடைபெறும்" என்று தெரிவித்திருந்தார்.. அந்தவகையில் இன்றைய தினம் அதிமுக நடத்தும் போராட்டம், மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+