சென்னையில் பீகார் குடும்பம் படுகொலை! 3 பேரின் உடலை சொந்த ஊர் கொண்டு செல்ல ஏற்பாடு!
சென்னை: சென்னை தரமணி பாலிடெக்னிக் கல்லூரியில் கொலை செய்யப்பட்ட பீகார் தம்பதி, அவர்களது குழந்தை ஆகியோரின் உடலை எந்தவித கட்டணமும் இன்றி சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பீகார் மாநிலத்திலிருந்து வேலை தேடி சென்னைக்கு வந்த கவுரவ் குமார், அவரது மனைவி, 2 வயது குழந்தை ஆகியோர் வடமாநில இளைஞர்களால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 குற்றவாளிகள் சென்னை மாநகர காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். கொலை செய்யப்பட்ட மூவரது உடல்களையும் அவர்களது சொந்த மாநிலத்திற்கு கொண்டு செல்ல உதவி தேவைப்படுகிறது என்ற செய்தியை அறிந்த முதல்வர் ஸ்டாலின் தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மூலம் எவ்வித கட்டணமுமின்றி, அவர்களது உடல்களை சொந்த மாநிலத்திற்கு கொண்டு சென்று உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கவுரவ் குமார் (24). இவர் தனது மனைவி, குழந்தையுடன் வேலை தேடி கடந்த மாதம் 21 ஆம் தேதி சென்னை வந்தனர். அப்போது வேலைக்காக தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளியாக இருக்கும் சிக்கந்தரை கவுரவ் குமார் அணுகினாராம்.
அப்போது பாலிடெக்னிக் பின்புறம் உள்ள ஒரு கட்டடத்தில் தங்கிக் கொள்ளுமாறு, வேலை கிடைத்ததும் அதற்கேற்ப மாறிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தாராம். இதை நம்பிய கவுரவ் குமார், சிக்கந்தர் சொன்ன இடத்திலேயே தங்கியிருந்தாராம்.
இந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி சிக்கந்தர், தனது நண்பர்கள் லலித் பிரசாத், விகாஷ் யாதவ் ஆகியோருடன் அதே கட்டடத்தில் மது அருந்தினாராம். அப்போது அங்கிருந்த கவுரவ்வின் மனைவியிடம் அத்துமீற முயன்ற போது கவுரவ் தடுத்துள்ளார். அவரை அந்த 3 பேரும் அடித்துக் கொன்றனர்.
கணவனை காப்பாற்ற போராடிய போது கவுரவ் மனைவி அடித்துக் கொல்லப்பட்டார். இதனால் அங்கு அழுது கொண்டிருந்த 2 வயது குழந்தையையும் அந்த கும்பல் அடித்துக் கொன்றது.
இதையடுத்து 3 பேரின் உடல்களையும் தனித்தனி சாக்குமூட்டையில் கட்டினர். குழந்தையின் உடலை மத்திய கைலாஷ் ரயில் நிலையம் அருகே உள்ள சாக்கடையிலும் கவுரவ்வின் மனைவியை பெருங்குடி குப்பைமேட்டிலும் வீசினர். கவுரவ்வின் உடலை இரு சக்கர வாகனத்தில் தூக்கி சென்று அடையாறு இந்திரா நகர் பகுதியில் போட்டுவிட்டு தப்பிவிட்டனர்.
இந்த நிலையில் இந்திரா நகரில் உள்ள கவுரவ்வின் உடல் கட்டியிருந்த மூட்டையில் இருந்து ரத்தம்வழிவதை பார்த்து அப்பகுதியினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் போலீஸார் உடலை மீட்டு விசாரித்தனர்.
அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து தேடிய போது சிக்கந்தர் உள்ளிட்டோர் சிக்கினர். அவர்களை கைது செய்த போலீஸார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications