சென்னையில் இருந்து அயோத்திக்கு விமானத்தில் பறக்கலாம்.. ஜன.6 முதல் விமான சேவை.. கட்டணம் எவ்வளவு?
சென்னை: அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டுள்ள விமான நிலையம் வரும் 30ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. ஜனவரி 6ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை தொடங்க உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப்பணிகள் முடிவடைந்துள்ளன. 54,700 சதுர அடி பரப்பளவில் 360 அடி நீளமும் 235 அடி அகலமும், தரையில் இருந்து 16.5 அடி உயரமும் கொண்ட இத் திருக்கோயில் ஐந்து குவி மாடங்கள், மூன்று தளங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் உடையதாக இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய விடுதலைக்குப் பின் இந்தியாவில் கட்டப்படும் மிகப் பிரம்மாண்டமான முதல் திருக்கோயில் இதுதான்.

வரும் ஜனவரி 22ஆம் தேதி இராமர் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி. இந்தக் கோயிலின் கட்டுமானத்திற்குத் திட்டமதிப்பு ரூபாய் 1700 கோடி வரை முடிவு செய்திருந்த போதிலும் ஸ்ரீ இராம பக்தர்களின் காணிக்கையாக மட்டும் 3400 கோடிகளுக்கு மேல் பொருள் உதவி கிடைத்துள்ளது.
கட்டுமான செலவு போக மீதமிருக்கும் பணத்தை அயோத்தியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் என்று கோயில் அறக்கட்டளையினர் சார்பில் கூறப்பட்டுள்ளது. மூலவரை இராம் லல்லா என்கிறார்கள். இராம் லல்லா என்றால் குழந்தை இராமர் அல்லது பால இராமர் எனப்பொருள் படும் . இந்த இராம ஜென்மபூமியில் உள்ள இக்கோயிலின் மூலவர் குழந்தை இராமர் ஆவார்.
இந்த ஆலயத்தை தரிசனம் செய்ய நாடு முழுவதிலும் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டு போக்குவரத்து வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. ரயில் நிலையம் அற்புதமாக கட்டப்பட்டுள்ளது. சர்வதேச தரத்தில் விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. தற்போது விமான நிலையத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது. வரும் 30ஆம் தேதியன்று அயோத்தி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள விமான நிலையத்தின் முதல் கட்ட விமான சேவை அயோத்தியில் இருந்து டெல்லி மற்றும் அகமதாபாத்திற்கு விமானங்கள் தொடங்கும். ஜனவரி 6 முதல் அயோத்திக்கான வணிக விமான சேவையைத் தொடங்கும்.
ஏவியேஷன் நிறுவனத்தின் அறிக்கையின்படி ஜனவரி 6, 2024 முதல் டெல்லி மற்றும் அயோத்தி இடையே நேரடி விமானங்கள் இயக்கத் தொடங்கும், அதன் பிறகு உடனடியாக அகமதாபாத் மற்றும் அகமதாபாத் இடையே விமானங்கள் முதல் வாரத்தில் மூன்று நாட்கள் செயல்படத் தொடங்கும்.
ஜனவரி 6 ஆம் தேதி முதல் வணிக விமானம் டெல்லியில் இருந்து காலை 11.55 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.15 மணிக்கு அயோத்தியை சென்றடையும். இந்த விமானம் அயோத்தியில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு 3 மணிக்கு டெல்லி சென்றடையும். தற்போது, இண்டிகோ ஏர்லைன்ஸில் ஜனவரி 6ஆம் தேதி டெல்லியில் இருந்து அயோத்திக்கு ரூ.7,799 கட்டணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல ஜனவரி 6 முதல் சென்னை, அகமதாபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களிலிருந்து அயோத்திக்கு விமான சேவை தொடங்க உள்ளது. கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூருவில் இருந்தும் விமானம் இயக்கப்படும் என இண்டிகோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கட்டண விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications