"சிங்கப்பூர் ஸ்டைல்.." சென்னையின் இதய பகுதியில் வரும் மெகா மாற்றம்! தமிழக அரசு மேஜர் பிளான்
சென்னை: தலைநகர் சென்னையின் இதய பகுதியில் சிங்கப்பூர் ஸ்டைலில் பிரம்மாண்டமான பூங்கா ஒன்று அமைய உள்ளது. இதற்கான முதற்கட்ட சர்வே ஏற்கனவே தொடங்கிவிட்டது.
சென்னையின் உட்கட்டமைப்பை மேம்படுத்தத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. போக்குவரத்து, மேம்பாலம் என்று மட்டுமின்றி மக்கள் மனதிற்குப் புத்துணர்ச்சியை அளிக்கும் உள்கட்டமைப்பு பணிகளிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

நகரமயமாக்கல் காரணமாகச் சென்னை வேகமாக வளர்க்கிறது. இதனால் எங்கும் அலுவலகங்கள், குடியிருப்பு பகுதிகள் மட்டுமே இருக்கும் நிலையில் மக்கள் சற்று இளைப்பாற இடங்களே இல்லாமல் போய்விட்டன.
சிங்கப்பூர் ஸ்டைல்: இதற்கு ஏற்கனவே இருக்கும் பூங்காக்களையும் மறுசீரமைக்கத் திட்டமிட்டுள்ளார். மேலும், இதனால் நகரில் முக்கிய இடங்களில் இதற்காகப் பூங்கா உள்ளிட்டவற்றை அமைக்க உள்ளன. அதன்படி இப்போது சென்னையில் 6.09 ஏக்கர் நிலப்பரப்பில் கலைஞர் நினைவு நூற்றாண்டு பூங்கா அமைக்கப்பட உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தனது சுதந்திர தின உரையில் இது குறித்த முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். ரூ. 25 கோடி செலவில் இந்த பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்கிடையே சிங்கப்பூரில் உள்ள பொட்டானிக்கல் தாவரவியல் கார்டன் மற்றும் அங்குள்ள பூங்காவின் மாடலை அடிப்படையாகக் கொண்ட அமைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையின் இதய பகுதியில்: இந்த தாவரவியல் பூங்கா கதீட்ரல் சாலையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு அருகில் பிரதான சாலையில் அமைய உள்ளது. இந்த நிலம் பல ஆண்டுகளாகப் பிரச்சினையில் சிக்கிய நிலையில், இதில் கடந்த ஜூலை மாதம் தான் தமிழக அரசுக்குச் சாதகமான தீர்ப்பைச் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது. இதனால் இந்த நிலம் மீண்டும் தமிழக அரசின் வசம் வர உள்ள நிலையில், இங்கு தான் இந்த சிங்கப்பூர் ஸ்டைல் பிரம்மாண்ட தாவரவியல் பூங்காவை அமைக்கத் திட்டமிட்டுள்ளனர்.

நிலம் வந்தாச்சு: இதற்கு முன்பு வரை இந்த நிலம் வேளாண் தோட்டக்கலை சங்கத்திடம் இருந்தது. இந்த நிலத்தை மீட்கும் சட்டப்பூர்வ நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு கடந்த 1989ஆம் ஆண்டில் தொடங்கியது. சுமார் 33 ஆண்டுகளாக இந்த சட்டப் போராட்டம் தொடர்ந்த நிலையில், இப்போது தான் இந்த நிலம் தமிழ்நாடு அரசின் வசம் வந்துள்ளது.
இத்தனை ஆண்டுகள் இது தோட்டக்கலை சங்கத்திடம் இருந்த நிலையில், அவர்கள் ஏற்கனவே இந்த இடத்தில் செங்காந்தல் பூங்கா என்ற பூங்காவை அமைத்துள்ளனர். இந்த பூங்காவும் வேளாண் தோட்டக்கலை சங்கத்தின் வசம் தான் இருந்தது. நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து செங்கந்தல் பூங்காவையும் அருகில் இருக்கும் காலி இடத்தையும் பிரிக்கும் வேலிகளை அகற்றப்பட்டுள்ளது. அடுத்து வரும் காலத்தில் இரண்டு இடங்களையும் ஒரு சேர டெவலப் செய்யத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சிங்கப்பூர் சென்று ஆய்வு: இங்கு தான் சிங்கப்பூரில் உள்ள தாவரவியல் பூங்காவைப் போல ஒரு பொட்டானிக்கல் கார்டனை அமைக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அங்குப் பூங்கா எப்படி இருக்கிறது. அதை எப்படிப் பராமரிக்கிறார்கள் என்பதை விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் தோட்டக்கலை இயக்குநர் ஆர்.பிருந்தா தேவி நேரடியாகச் சிங்கப்பூர் சென்று ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "செங்காந்தல் பூங்காவுக்கு அருகிலேயே இந்த புதிய பூங்காவை அமைக்க உள்ளோம். அடுத்து வரும் காலங்களில் இரண்டையும் ஒருசேர டெவலப் செய்ய உள்ளோம்.. சாலையின் மறுபுறம் உள்ள செம்மொழிப் பூங்காவுடன் இதை இணைக்கவும் திட்டமிட்டுள்ளோம். இரண்டையும் இணைக்க நடை மேம்பாலம் அமைக்கலாமா அல்லது சுரங்க நடைபாதை அமைக்கலாமா என்பது குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும்" என்றனர்.
தொடங்கியது சர்வே: இந்த பகுதியில் எப்படி பூங்காவை அமைக்கலாம் என்பது குறித்த ஆய்வுப் பணிகள் இப்போதே தொடங்கிவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆய்வுப் பணிகள் முழுமையாக முடிவடைந்த பிறகு இது குறித்த விரிவான ஆய்வு முடிவு விரைவில் முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அதன் அடிப்படையில் முதல்வர் இறுதி முடிவை எடுப்பார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications