"வெறும் ஒரு மணி நேரத்தில் சென்னை டூ பெங்களூர்.." வருகிறது அதிவேக ரயில் திட்டம்.. வெளியான மேஜர் தகவல்
சென்னை: நமது நாட்டில் ரயில்வே உட்கட்டமைப்பை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூருக்கு வரும் புதிய அதிவேக ரயில் திட்டம் தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த அதிவேக புல்லட் ரயில் திட்டம் தென் இந்தியாவில் கேம் சேஞ்சராக இருக்கும் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் வெறும் 90 நிமிடத்தில் சென்னையில் இருந்து மைசூருக்கே சென்றடைய முடியும்.
தென்னிந்தியாவின் இரண்டு முக்கிய நகரங்களாகச் சென்னை பெங்களூர் இருக்கிறது. இந்த இரு முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் ஏற்கனவே பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

புல்லட் ரயில்: இதற்கிடையே இந்த ரூட்டில் புல்லட் ரயில் திட்டத்தை ஏற்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.. இதற்கிடையே இது தொடர்பான ரிப்போர்ட்டை பிரபல ஆங்கில செய்தி நிறுவனமான தி டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ளது. 463 கிலோமீட்டர் நீளத்திற்கு அமையும் இந்த ரயில் திட்டம் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. பெங்களூரில் 3 நிறுத்தங்கள் உட்பட மொத்தம் 11 இடங்களில் இந்த ரயில் நின்று செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த ரயில் மணிக்கு 350 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இருப்பினும், பாதுகாப்பு கருதி அதிகபட்சமாக மணிக்கு 320 கிமீ இந்த ரயில் செல்லும் வகையில் இருக்கும். இந்த ரயிலின் சராசரி வேகம் மணிக்கு 250 கிமீ ஆக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் சென்னையில் இருந்து வெறும் 90 நிமிடத்தில் மைசூருக்கு சென்றடைய முடியும்.
எவ்வளவு நிறுத்தங்கள்: இந்த ரயில் தமிழகத்தில் சென்னை மற்றும் பூந்தமல்லி ஆகிய இரண்டு இடங்களில் நின்று செல்லும். இது தவிர சித்தூர், கோலார், கோடஹள்ளி, ஒயிட்ஃபீல்டு, பையப்பனஹள்ளி, எலக்ட்ரானிக்ஸ் சிட்டி, கெங்கேரி, மாண்டியா மற்றும் மைசூர் ஆகிய இடங்களில் இந்த ரயில் நின்று செல்லும் வகையில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டமான மும்பை- அகமதாபாத் ரயில் பணிகள் இப்போது படுவேகமாக நடந்து வரும் நிலையில், அது முடிந்த பிறகு இந்த சென்னை- பெங்களூர்- மைசூர் ரயிலுக்கான பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிகிறது. மேம்பாலம், சுரங்கப்பாதை என்று இந்த ரயில் பயணிக்கத் தனியாகப் பாதை உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
சுரங்க ரயில் பாதை: இந்த திட்டத்தில் மொத்தம் 30 கிமீ தூரத்திற்குச் சுரங்க ரயில் பாதை அமைய உள்ளது. சென்னையில் 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கு அமையும் நிலையில், சித்தூரில் 11.8 கிலோமீட்டரும், பெங்களூர் ரூரல் பகுதியில் 2 கிலோமீட்டர் தூரத்திற்கும் சுரங்க ரயில் பாதை அமைகிறது. அதிகபட்சமாகப் பெங்களூர் நகர்ப் பகுதியில் சுமார் 14 கிமீ தொலைவுக்குச் சுரங்கத்தில் ரயில் பாதை அமைய உள்ளது.
இந்த புல்லட் ரயில் திட்டம் இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில் சென்னை டூ பெங்களூர் வரை 306 கிமீ தொலைவுக்கு ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் சென்னை டூ பெங்களூர் வெறும் 1 மணி நேரத்தில் செல்ல முடியும். அதன் பிறகு இரண்டாவது கட்டத்திலேயே இது பெங்களூர் டூ மைசூர் வரை 157 கிமீ தொலைவுக்கு நீட்டிக்கப்படும்.
3 மாநிலங்கள்: இந்த மொத்த புல்லட் ரயில் திட்டத்தில் 258 கிமீ தொலைவு கர்நாடகாவில் அமைகிறது. அதேபோல 132 கிமீ தமிழகத்திலும் மீதி ஆந்திரப் பிரதேசத்திலும் அமைகிறது. இந்த புல்லட் ரயில் திட்டமானது மொத்தம் 313 நகரங்கள் மற்றும் கிராமங்கள் வழியாகச் செல்லும். தென்னிந்தியாவில் கேம் சேஞ்சராக இருக்கும் இந்தத் திட்டம் நமது நாட்டின் போக்குவரத்து உட்கட்டமைப்பின் மிக முக்கிய சாதனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications