சென்னை டூ திருச்சிக்கு இன்று இரவு ஸ்பெஷல் மெமு ரயில்.. பயணிகளே பயன்படுத்திக்கோங்க!
சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து இன்று இரவு திருச்சிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக தெற்கு ரயில்வே இந்த சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது.
கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் இந்த மாதம் முழுவதுமே ரயில், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலாவிற்கு செல்வது.. சொந்த ஊருக்கு செல்வது என பல்வேறு காரணங்களுக்காக மக்கள் பயணம் செய்து வருகிறார்கள்.

இதனால், பேருந்து, ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. ரயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் அனைத்தும் விரைவாக விற்று தீர்ந்து விடுவதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனால் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்களையும் ரயில்வே நிர்வாகம் அறிவித்து வருகிறது.
சென்னையில் இருந்து கோவை, திருச்சி வழியாக தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் அவ்வப்போது இயக்கப்பட்டு வருகிறது. என்னதான் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டாலும் பயணிகள் கூட்டத்தை சமாளிக்க இது போதுமானதாக இல்லை. இதனால், பேருந்துகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டது.
டிக்கெட் கிடைக்காதபட்சத்தில் வேறுவழியின்றி ஆம்னி பேருந்துகளில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை கொடுத்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளதாக பயணிகள் ஆதங்கத்துடன் கூறி வருவதையும் காண முடிகிறது. அதிலும் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ரயில், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்த நிலையில் தான் சென்னையில் இருந்து திருச்சிக்கு இன்று இரவு சிறப்பு மெமு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 9.25 மணிக்கு புறப்படும் இந்த ரயில் 9 நிறுத்தங்களுடன் நாளை காலை 5.30 மணிக்கு திருச்சி சென்றடையும்.
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், லால்குடி, ஸ்ரீரங்கம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 12 பெட்டிகளை கொண்ட இந்த ரயில் முழுவதும் முன்பதிவில்லாத ரயில் ஆகும். பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக இந்த ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications