சென்னையில் நெஞ்சை பிடித்தபடியே சாலையில் சரிந்த இளைஞர்! போலீஸ் எஸ்ஐ மகேந்திரனுக்கு குவியும் பாராட்டு
சென்னை: சென்னையில் நெஞ்சு வலியால் சாலையில் சரிந்து போராடிய இளைஞர் உயிரை வாகன தணிக்கையில் இருந்த போலீஸார் காப்பாற்றிய சம்பவத்தால் அவர்களுக்கு பாதுகாப்பு குவிகிறது.
துரைப்பாக்கம் ரேடியல் ரோடு சந்திப்பு அருகே கடந்த 6ஆம் தேதி போலீஸார் வாகனத் தணிக்கை மற்றும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதியம் 1 மணி அளவில் இளைஞர் ஒருவர் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தார்.

அப்போது அவர் திடீரென நெஞ்சை பிடித்தபடியே சாலையில் சரிந்து விழுந்தார். இதைக் கண்ட உதவி ஆய்வாளர் மகேந்திரன் உள்ளிட்ட போலீஸார் ஓடிச் சென்று அவரை தூக்கினர். அப்போது அவர் மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்டார்.
உடனடியாக அந்த காவலர்கள் இளைஞரை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த மாநகராட்சி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஈசிஜியும் எடுக்கப்பட்டது.இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அவர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் (32) என்பதும் அவர் சென்னையில் தங்கி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. வேலைக்கு செல்வதற்காக இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்லும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் கீழே சரிந்ததும் தெரியவந்தது.
போலீஸார் அந்த இளைஞருக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க நேரிட்டதால் அவர் தற்போது நலமுடன் இருக்கிறார். முருகனை காப்பாற்றிய உதவி ஆய்வாளர் மகேந்திரன் உள்ளிட்ட போக்குவரத்து போலீஸாரை துணை ஆணையர் பண்டி கங்காதர் நேரில் அழைத்து பாராட்டினார்.
அது போல் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேரை போலீஸார் காப்பாற்றியுள்ளனர். பலருக்கு சிபிஆர் சிகிச்சை அளித்து பின்னர் மருத்துவமனைகளுக்கு கொண்டு போய் அங்கு அவர்களை காப்பாற்றியுள்ளனர்.
மனிதர்கள் மட்டுமில்லை, குரங்கு உள்ளிட்ட விலங்குகளுக்குக் கூட வாயோடு வாய் வைத்து மூச்சுக் காற்றை கொடுத்தும் சிபிஆர் செய்தும் போலீஸார் காப்பாற்றிய சம்பவங்களும் நடந்துள்ளன. அது போல் காணாமல் போனவர்களை அவர்களுடைய உறவுகளுடன் சேர்த்து வைப்பது, குப்பைத் தொட்டிகளில் வீசப்படும் குழந்தைகளுக்கு பெண் போலீஸார் தாய்ப்பால் கொடுப்பது, வீதிகளில் மிகவும் அழுக்காக சுற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குளிப்பாட்டி, ஷேவிங் செய்து புத்தாடைகளை எடுத்துக் கொடுத்து அவர்களுக்கு புது வாழ்வு தந்த சம்பவங்கள் என ஏராளமாக அடுக்கிக் கொண்டே செல்லலாம்.












Click it and Unblock the Notifications