தோல்வியில் முடிந்த கிண்டி ரேஸ் கிளப் லாபி.. அசத்தலாக வென்ற தமிழக அரசு.. வழக்கில் நடந்த ட்விஸ்ட்
சென்னை: சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த வழக்கில் அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் வில்சன் மற்றும் சிறப்பு அரசு வழக்கறிஞர் D. ரவிச்சந்தர் ஆகியோர் ஆஜராகி வாதம் வைத்தனர்.
அரசு நிலத்தை தனி நபர்களின் தேவைக்காக பயன்படுத்த அனுமதிப்பது, மக்கள் நம்பிக்கையை சீர்குலைக்கும் என்று கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் குளங்கள், சுற்றுச் சூழல் பூங்கா அமைக்கும் பணிக்கு அனுமதித்த உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. திட்டங்களுக்கு தனி நீதிபதி பிறப்பித்த தடைக்கு எதிராக இரு நீதிபதிகள் அமர்வில் அரசு மேல்முறையீடு செய்திருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

வழக்கு பின்னணி
சென்னை, கிண்டியில் மெட்ராஸ் ரேஸ் கிளப்பிற்கு (MRC) பிரிட்டிஷ் காலத்தில் குத்தகைக்கு விடப்பட்ட 160.86 ஏக்கர் அரசு நிலத்தில், சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் குளங்கள் அமைப்பது அவசியம் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. 2015 வெள்ளப்பெருக்கு போன்ற பேரழிவுகளைத் தடுக்க இது நகரத்திற்கு மிகவும் தேவை என நீதிமன்றம் வலியுறுத்தியது.
நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், முகமது ஷஃபிக் அடங்கிய அமர்வு தெரிவித்ததாவது: "சுற்றுச்சூழல் பூங்கா பல நோக்கங்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, பருவமழை காலங்களில் நகரத்தில் அதிகரிக்கும் வெள்ள அபாயத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். இரண்டாவதாக, காற்று மாசுபாடு மற்றும் காற்றின் தரக் குறியீடு (AQI) அளவுகள் குறித்த தீவிர கவலைகளை மீண்டும் வலியுறுத்த வேண்டும், இதன் குறைப்பு சுற்றுச்சூழல் பூங்காவின் முக்கிய காரணிகளில் ஒன்றாகும்."
காற்று மாசு வெறும் சுற்றுச்சூழல் பிரச்சனை அல்ல, அது ஒரு பொது சுகாதார அவசரம் என்ற தமிழ்நாடு அரசின் மூத்த வழக்கறிஞர் வில்சன் மற்றும் சிறப்பு அரசு வழக்கறிஞர் D. ரவிச்சந்தரின் வாதத்தை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். அமர்வு மேலும் கூறியது: "சமீப காலத்தில் காற்று மாசு காரணமாக டெல்லி குடிமக்கள் அனுபவித்த நிலை ஒரு முக்கியமான நினைவூட்டல் இதற்கு. அங்கு, அதிகரித்து வரும் காற்றின் தரக் குறியீடு ஊரடங்குகள், பள்ளிகள் மூடல், பொது வாழ்க்கையில் இடையூறுகள், கடுமையான உடல்நல பாதிப்புகளுக்கு வழிவகுத்தன."
மெட்ராஸ் ரேஸ் கிளப்பிற்குச் சாதகமாக இருந்த தற்போதைய நிலையைத் தொடர வேண்டும் (status quo) என்ற உத்தரவுக்கு எதிரான மாநில அரசின் மேல்முறையீட்டை அமர்வு அனுமதித்தது. கிண்டி நிலத்தில் உருவாகும் சுற்றுச்சூழல் பூங்கா சுற்றுலாவுக்கு ஊக்கமளிப்பதுடன், பல வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு இயற்கை வாழ்விடமாகவும் அமையும் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இது பொது நலன் சார்ந்தது என்பதால், முந்தைய உத்தரவு தடையாகாது எனவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
சென்னை சதுப்பு நிலங்களில் அதிகரித்த கட்டுமானங்கள்
நீதிபதி ஷஃபிக், பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தின் (IISc) நீர் ஆராய்ச்சி மையத்தால் 2016 மே மாதம் தயாரிக்கப்பட்ட 'சென்னை வெள்ளம் 2015 - ஒரு விரைவான மதிப்பீடு' அறிக்கையைச் சுட்டிக்காட்டினார். சென்னை சதுப்பு நிலங்களில் அதிகரித்த கட்டுமானங்களே 2015 வெள்ளத்தின் கடுமையான பாதிப்புகளுக்கும், அடுத்தடுத்த சேதங்களுக்கும் காரணம் என அந்த அறிக்கை கூறியது.
இந்த அறிக்கையின்படி, 2015 நவம்பர்-டிசம்பர் மாதங்களில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 400க்கும் மேற்பட்டோர் உயிரழந்தனர். 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு, சுமார் 1.8 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர். 6,605 நிவாரண முகாம்களில் சுமார் 1.7 மில்லியன் பேர் தங்கவைக்கப்பட்டனர். இதன் பொருளாதார இழப்பு தோராயமாக $3 பில்லியன்.
3.042 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் தங்கள் வீடுகளில் சேதத்தை சந்தித்தன. சென்னைப் பகுதிகளில் சுமார் 30% குடும்பங்கள் ₹2 லட்சம் முதல் ₹20 லட்சம் வரை தனிப்பட்ட இழப்பைச் சந்தித்தன. அமர்வு குறிப்பிட்டது. தொழில்துறை மற்றும் வணிகச் செயற்பாடுகள் ஸ்தம்பித்தன. சென்னை விமான நிலையம் டிசம்பர் 1 முதல் 6 வரை மூடப்பட்டதுடன், தொழில்துறை உற்பத்தியின் நிறுத்தத்தால் மட்டும் கிட்டத்தட்ட ₹15,000 கோடி இழப்பு ஏற்பட்டது.
அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் வில்சன் மற்றும் சிறப்பு அரசு வழக்கறிஞர் D. ரவிச்சந்தர் சமர்ப்பித்தபடி, கிண்டி நிலத்தில் ஏற்கனவே தோண்டப்பட்டுள்ள நான்கு குளங்கள் வேளச்சேரி, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், கிண்டி, பல்லிக்கரணை உட்பட அப்பகுதிகளில் எதிர்கால வெள்ளப் பாதிப்பைக் குறைக்கும். மேலும், 118 ஏக்கரில் திட்டமிடப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பூங்கா, நகருக்கு அத்தியாவசியமான இயற்கை சூழலை வழங்கும்.
வெள்ள தடுப்பு நடவடிக்கையாகக் குளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதன் அவசியம் பரந்த பொது நலனுக்கு முக்கியம் என இதையடுத்து கோர்ட் தனது உத்தரவில் கூறியது.
இந்த பணிகள் எந்த வகையிலும், குறிப்பாக நீதித்துறை உத்தரவுகளாலும் தடுக்கப்படக்கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தற்போதைய நிலையைத் தொடர' (status quo) அனுமதிக்க முடியாது. அதனால் இங்கே பூங்கா அமைக்கலாம் என்று கோர்ட் தனது உத்தரவில் கூறியது.












Click it and Unblock the Notifications