தொட்டுத் தொட்டு பேசிய விருகம்பாக்கம் போலீஸ்.. ஸ்ட்ரைட்டாக கமிஷனர் கிட்டயே புகாருடன் போன சென்னை பெண்
சென்னை: திருமணம் செய்வதாக உல்லாசமாக இருந்து ஏமாற்றிய காதலன் மீது புகார் அளிக்க வந்த இளம் பெண் இன்ஜினியருக்கு வாட்ஸ் ஆப் மூலம் உல்லாசத்திற்கு அழைத்து பாலியல் தொந்தரவு செய்ததாக விருகம்பாக்கம் உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபு மற்றும் பெண் எஸ்ஐ ஆகியோரை கமிஷனர் அருண் அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் பிரியா.. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சாப்ட்வேர் என்ஜினியராக உள்ள பிரியா, கனடா நாட்டில் என்ஜினியராக வேலை பார்க்கும் தினேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை காதலித்து வந்தார். போனிலேயே இருவரும் காதலை வளர்த்து வந்தனர்.

கனடாவிலிருந்து தினேஷ் விடுமுறைக்கு சென்னை வந்தபோது, பிரியாவுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளதாக தெரிகிறது. இருவரும் பல இடங்களுக்கு சென்று ஜாலியாகவும் இருந்துள்ளனர்.. ஆனால் அதற்கு பிறகுதான், தினேஷூக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்ற விஷயமே பிரியாவுக்கு தெரியவந்துள்ளது.. தினேஷூக்கு குழந்தைகளும் இருக்கிறார்கள்..
பெண் போலீஸ் பெனசீர் பேகம்
இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியா, இதுகுறித்து தினேஷிடம் கேட்டுள்ளார்.. இதுவே தகராறாக வெடித்துள்ளது.அப்போது தினேஷ், உல்லாசமாக இருந்தபோது எடுத்த வீடியோவை சோஷியல்மீடியாவில் பதிவிடுவதாக மிரட்டியிருக்கிறார்..
இதனால் செய்வதறியாமல் விழித்த பிரியா, உடனே இதுகுறித்து விருகம்பாக்கம் மகளிர் போலீஸில் புகார் தந்திருக்கிறார். இந்த புகாரை, பெண் உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம் விசாரித்திருக்கிறார்.. மேலும் பிரியாவிடம், எப்படியாவது தினேஷிடமிருந்து நியாயம் பெற்று தருவதாக சொல்லி, பிரியாவிடம் நட்பாக பேசியிருக்கிறார் பெண் போலீஸ் பெனசீர் பேகம்..
அதுமட்டுமல்ல, தன்னுடைய வீட்டிற்கு தேவையான மளிகை, ஆடம்பர பொருட்கள் என பல லட்சம் ரூபாய்க்கு ஆன்லைன் மூலம் பொருட்களையும் பிரியா மூலம் வாங்கி கொண்டுள்ளார்.. அதேசமயம், பிரியா தந்த புகார் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருப்பதற்காகவும், கைது செய்யாமல் இருப்பதற்காகவும் தினேஷிடம் பல லட்சம் ரூபாயை வாங்கியிருக்கிறார் உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம்.
முன்ஜாமீன்
அத்துடன் கோர்ட்டில் தினேஷ் முன்ஜாமீன் பெறுவதற்கான உதவிகளையும் பெனசீர் பேகம் செய்து தந்துள்ளார்.. இந்த முன்ஜாமீனை வாங்கி கொண்ட தினேஷ், உடனடியாக சென்னையில் இருந்து மீண்டும் கனடாவுக்கே கிளம்பி சென்றுவிட்டார்.
தினேஷ் கனடா சென்றபிறகுதான், பிரியாவுக்கு அனைத்து உண்மையும் தெரியவந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து நியாயம் கேட்டும் பெனசீர் சரியான பதிலை சொல்லாததால், இணை கமிஷனர் தீஷா மிட்டலை நேரில் சந்தித்து பிரியா புகார் தந்தார். மேலும் பெனசீர் பேகத்துக்கு செய்த செலவுகளையும் ஆவணங்களுடன் சமர்ப்பித்தார்.
ஆபாசமான பேச்சு
இதையடுத்து, பிரியாவின் புகார் மீது நடவடிக்கை எடுக்கும்படி விருகம்பாக்கம் உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபுவுக்கு இணைகமிஷனர் தீஷா மிட்டல் உத்தரவிட்டார்.
பிறகு உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பாபு, பெண் பெனசீர் பேகம் மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக கூறி உறுதி தந்துள்ளார்.. ஆனால், பிரியாவுக்கு நள்ளிரவில் ஆபாச மெசேஜ் அனுப்பி உள்ளார்.. விசாரணை என்ற பெயரில் ஸ்டேஷனுக்கு அழைத்து, தோளின் மீது கை வைத்து தொட்டு தொட்டு பேசினாராம். ஆனால், பெனசீர் பேகம் மீது எந்த நடவடிக்கையும் பாலகிருஷ்ண பாபு எடுக்கவில்லையாம்.
"உன்னை பார்த்ததில் இருந்தே எனக்கு வேலையில் கவனம் போகவில்லை. நான் சொல்வதை செய்தால், உனக்கு உதவி செய்கிறேன் என்று கூறி, ஆபாசமாக பேசியிருக்கிறார்.. பிறகு உல்லாசத்துக்கும் அழைத்தாராம்.
கமிஷனரிடமே புகாருடன் சென்ற பெண்
இதனால் மனவேதனையும், அதிர்ர்ச்சியும் அடைந்த பிரியா, நேரடியாக கமிஷனரிடமே புகாருடன் சென்றுவிட்டார்.. விருகம்பாக்கம் உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபு மற்றும் பெண் உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம் மீது புகார் தந்தார்..
இந்த புகாரை கண்ட கமிஷனர் அருண், 2 போலீஸ்காரர்கள் மீதும் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டார்.. அத்துடன், உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபு, பெண் உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம் ஆகியோரை அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்..
தற்போது சம்பந்தப்பட்ட 2 போலீஸ்காரர்களிடம் விசாரணை நடக்கிறது.. இதில் ஹைலைட் என்னவென்றால், பெண் உதவி ஆய்வாளர் பெனசீர் பேகம், அண்ணாநகர் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றியபோது, சாலையோர வியாபாரிகள் மற்றும் புகார் அளிக்க வந்தவர்களிடம் பணம் வாங்கி சிக்கியவராம்... அது தொடர்பான 5 வழக்குகள் இந்த பெண் போலீஸ் மீது உள்ளதாம்.












Click it and Unblock the Notifications