கணவரின் லேப்டாப்பில் அந்த காட்சி! பெருங்களத்தூரில் பெண் டாக்டர் எடுத்த விபரீத முடிவு.. ஆடிப்போன சென்னை
சென்னை: சென்னை பெருங்களத்தூரில் (Chennai's Perungalathur Doctor) திருமணம் ஆகி 10 மாதங்கள் ஆன நிலையில் இளம்பெண் டாக்டர் ஜோதிஸ்வரி எடுத்த விபரீத முடிவு அப்பகுதியினை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தன் கணவர் கஞ்சா பழக்கம், பெண்களுடன் பழக்கம் வைத்துள்ளதாலும், தனக்கு முக்கியத்துவம் கொடுக்காததாலும் விரக்தியில் இருந்து வந்துள்ளார். சமீபத்தில் கணவரின் லேப்டாப்பை பார்த்ததில் திருமணத்திற்கு பிறகும் அவர் 30-க்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு வைத்து அவர்களுடன் பழகியது தெரியவந்துள்ளது.
கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததால் விரக்தியடைந்த இளம்பெண் டாக்டர் 12வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது தொடர்பாக டாக்டர் எழுதிய தற்கொலைக் கடிதத்தை போலீசார் கைப்பற்றி, சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மத்திய அரசு மருத்துவமனையில் டாக்டர்
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் டாக்டர் ஜோதிஸ்வரி (வயது 30). பின்னர் இவர் ராமநாதபுரத்தில் வசித்து வந்தார். எம்பிபிஎஸ் படித்த ஜோதிஸ்வரி சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் ஆனது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த யோதிஸ்வரன் (34) என்பவருடன் ஜோதிஸ்வரிக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். என்ஜினியரான யோதிஸ்வரன், துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இருவருக்கும் திருமணம் ஆனதை அடுத்து மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தனர்.
அக்கா வீட்டுக்கு போன ஜோதிஸ்வரி
அப்போது ஜோதிஸ்வரி புனேயில் உள்ள மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். 3 மாதங்கள் மட்டுமே ஒன்றாக வசித்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதையடுத்து தான் சென்னை கோடம்பாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து அங்கு வசித்து வந்தார். அவருக்கு உதவியாக அவரது தாயும் உடன் இருந்தார்.
எனினும், சொந்த ஊரான ராமநாதபுரத்தில் வேலை பார்த்து வந்த யோதிஸ்வரன் அவ்வப்போது சென்னை வந்து மனைவியை பார்த்து விட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று சுதந்திர தினத்தையொட்டி விடுமுறை என்பதால், தனது அக்கா வீடு உள்ள பெருங்களத்தூர் ஸ்ரீராம் கேஸ்டில் உள்ள 12 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றார். காலையில் சென்ற அவர் மாலை வரை அங்கே இருந்துவிட்டு பின்னர் வீட்டுக்கு செல்வதாக புறப்பட்டார்.
திருமணம் ஆகி 10 மாதங்களே ஆகியுள்ளது
அப்போது அவர் லிஃப்டில் ஏறாமல் மொட்டை மாடிக்கு சென்றார். பின்னர் 12வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதில், தலையில் படுகாயம் அடைந்த ஜோதிஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த பீர்க்கன்கரணை போலீசார் ஜோதிஸ்வரியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
ஜோதிஸ்வரிக்கு திருமணம் ஆகி 10 மாதங்களே ஆகின்றதால், இதுபற்றி தாம்பரம் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டது. போலீசார் அவரது கைப்பையை கைப்பற்றியிருந்தனர். மேலும் உறவினர்களிடமும் விசாரணை நடத்தினர். இதில், அவர் தற்கொலை செய்வதற்கு முன்பாக உருக்கமான கடிதம் ஒன்றும் எழுதியிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த கடிதத்தில் இருப்பது பற்றி போலீசார் கூறியதாவது:
கணவரின் லேப்டாப்பை பார்த்து அதிர்ச்சி
ஜோதிஸ்வரியின் தந்தை, சிதம்பரம் பகுதியில் மளிகை கடை நடத்தி, தனது 3 மகள்களையும் படிக்க வைத்துள்ளார். படிப்பில் சிறந்து விளங்கிய ஜோதிஸ்வரி, எம்பிபிஎஸ்-இல் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். பின்னர் எம்எஸ் முடித்து மத்திய அரசு மருத்துவமனையில் பணியில் இருந்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையான யோதிஸ்வரனை மனப்பூர்வமாக விரும்பி திருமணம் செய்துள்ளார்.
ஆனால், யோதிஸ்வரன் மனைவிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கஞ்சா பழக்கம் உள்ளிட்ட பல்வேறு தீய பழக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இதேபோல், டேட்டிங் செயலி மூலமாக 30-க்கும் அதிகமான பெண்களுடன் தொடர்பில் இருந்துகொண்டு அவர்களுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இது பற்றி அவரிடம் கேட்டபோதும் அவர் எதுவுமே கூறவில்லையாம்.
தொடர்ந்து தன்னை உதாசீனப்படுத்தி வருவதை அறிந்த ஜோதிஸ்வரி, கணவரின் லேப்டாப்பை ஒரு நாள் திறந்து பார்த்துள்ளார். அப்போது அவர் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பது தெரிய வந்தது. இதனால் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார். இந்த நிலையில் தான் கோடம்பாக்கத்தில் தங்கியிருந்த ஜோதிஸ்வரி, பெருங்களத்தூரில் உள்ள அக்கா வீட்டுக்கு சென்றபோது இந்த சோக முடிவை எடுத்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர். டாக்டர் ஒருவரே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications