வேலைக்குப் போன நிலையில் காணாமல் போன 17 வயது சிறுமி.. 4 மாத கர்ப்பம்- காதலன் மீது பாய்ந்தது போக்சோ!
சென்னை: சென்னை புளியந்தோப்பு பகுதியில் 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய காதலன் தினேஷ்குமார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை, புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த தனது 17 வயது மகள் புரசைவாக்கத்தில் உள்ள ஒரு துணிக் கடையில் வேலை செய்ததாகவும் கடந்த 31-ந் தேதி இரவு வேலைக்கு சென்றவர் இரவு 10 மணி வரை வீடு திரும்பவில்லை எனவும் கடந்த ஆகஸ்ட் 1-ந் தேதி சென்னை புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் பேரில் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் காணாமல் போனா சிறுமி புளியந்தோப்பு திரு.வி.க நகர் 6-வது தெருவை சேர்ந்த தினேஷ் குமார் வயது 22 என்ற இளைஞருடன் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து சிறுமியை தினேஷ் குமாருடன் புளியந்தோப்பில் உள்ள ஒரு வீட்டில் இருந்து போலீசார் மீட்டனர். இந்த விசாரணையில் அந்த சிறுமி தினேஷ் குமாரை காதலித்து வந்ததாகவும் இருவரும் இரண்டு தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு அவரது உறவினர் வீட்டில் தங்கி இருந்ததும் தெரியவந்தது.
அந்த சிறுமி தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து சென்னை புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் தினேஷ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பின் சிறையில் அடைத்தனர்.

3 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு- 50 வயது நபருக்கு 27 ஆண்டு சிறை.
மூன்று வயது குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட, 50 வயது நபருக்கு 27ஆண்டு சிறை தண்டனை விதித்து, சென்னையில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ரவி (வயது50). கடந்த 2018ல், தான் குடியிருந்த வீட்டின் கீழ் பகுதியில் வசித்து வந்த தம்பதியின், மூன்று வயது குழந்தையை,தன் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.
அந்த குழந்தையிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். தனக்கு வலி இருப்பதாக, மறுநாள் குழந்தை கூறியதையடுத்து, பெற்றோர் விசாரித்துள்ளனர். அப்போது, ரவி தன்னிடம் நடந்து கொண்ட விபரத்தை குழந்தை கூறி உள்ளது. இது குறித்து, குழந்தையின் தாயார் அளித்த புகாரின் பேரில் எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி ரவியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சென்னையில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலட்சுமி, குழந்தையை கடத்தி சென்ற குற்றச்சாட்டுக்காகவும், 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தையை, பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுக்காவும், ரவிக்கு 27 ஆண்டு சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோருக்கு, நிவாரணமாக 5 லட்சம் ரூபாய் வழங்கவும், தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

உளுந்தூர்பேட்டையில் சரமாரி அரிவாள் வெட்டு- 6 பேர் படுகாயம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பிரகாஷ் நகர் பகுதியில் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொண்டனர். இந்த மோதலில் 6 பேர் படுகாயங்களுடன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை எம்.கே.பி நகரில் இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல்- 3 பேர் கைது
சென்னை, எம்.கே.பி நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்கப்படுவதாக எம்.கே.பி நகர் போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று முன்தினம் இரவு எம்.கே.பி நகர் 15வது மேற்கு குறுக்கு தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் இரண்டு கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்த எம்.கே.பி நகர் பகுதியை சேர்ந்த கணேசன், பூந்தமல்லியை சேர்ந்த சதீஷ் குமார், .குமரன் சாவடி பகுதியைச் சேர்ந்த சார்லஸ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் எம்.கே.பி நகர் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நூதன திருட்டு- அரிசி மூட்டைகளை ஆட்டைய போட்ட டிப்டாப் ஆசாமி கைது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் அதன் சுற்று கிராமப்பகுதிகளில் விஐபி போல் அரிசி கடைகளில் பேசி மூட்டை மூட்டையாக தூக்கிச்சென்று ஏமாற்றி வந்த பலே ஆசாமி கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் சில மாதங்களாக டிப்டாப் ஆசாமி ஒருவர் அரிசி மற்றும் மளிகை கடைகளில் தெரிந்தவர் போல் பேசி அரிசி மற்றும் எண்ணெய் வாங்கிச் சென்று ஏமாற்றியது நடந்து வந்தது. இது சம்பந்தமாக வந்த புகாரின் அடிப்படையில் சிங்கம்புணரி திருப்பத்தூர் துணை கண்காணிப்பாளர் பொன்ரகு உத்தரவின்பேரில் சிங்கம்புணரி சார்பு ஆய்வாளர் குகன் தலைமையிலான போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டது.
ஏமாற்றப்பட்டவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த பலே ஆசாமி வந்த டூவீலர் பதிவு எண்ணை வைத்து மோசடி பேர்வழி மதுரை மாவட்டம் மேலவளவு கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் செல்வ பாண்டி என்பது தெரியவந்தது. இதை அறிந்த சிங்கம்புணரி போலீசார் மேலூர் பகுதியில் அவர் தங்கியிருந்த வீட்டின் அருகே மாறுவேடத்தில் கண்காணித்து வந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி அளவில் பலே ஆசாமி அரிசி மூட்டையை ஏற்றிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் புறப்படத் தயாரானபோது மாறுவேடத்தில் இருந்த போலீசார் அமுக்கி பிடித்தனர். கொரோனா காலத்தில் வேலை இழந்து பணமின்றி தவித்ததால் வியாபாரிகளை செல்வபாண்டி ஏமாற்றி வந்தது விசாரணையில் தெரியவந்தது.
அப்படி ஏமாற்றி ஆட்டைய போட்ட பொருட்களை தேவைக்குப் போக மீதியை பாதி விலைக்கு விற்றதை ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து 10 மூட்டை அரிசி எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது செல்வபாண்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications