இந்தியாவிலேயே 2வது பெரிய வண்ண மீன் விற்பனையகம்! கொளத்தூரில் நவீனமயமாகிறது! ரூ 53 கோடியில் திட்டம்
சென்னை: சென்னை கொளத்தூரில் செயல்பட்டு வரும் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய வண்ண மீன் மார்கெட்டிற்கு புதிய காம்ப்ளக்ஸ் கட்டடம் விரைவில் கட்டப்பட இருப்பதாக சென்னை மாநகராட்சி வளர்ச்சி குழுமம் தெரிவித்துள்ளது. சுமார் 4.5 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ 53 கோடியில் இந்த நவீன சந்தை கட்டப்படவுள்ளது. தனது தொகுதியில் உள்ள சந்தைகளை ஒழுங்குமுறைப்படுத்த இந்த ஐடியாவை முதலில் கொடுத்ததே முதல்வர் ஸ்டாலின் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.
கொளத்தூரில் சமைக்கும் மீன் மார்க்கெட்டும், வீட்டில் வளர்க்க தேவையான வண்ண மீன்களும் கிடைக்கும். இங்கு மொத்தமாகவும் சில்லறையாகவும் மீன்கள், மீன் தொட்டிகள், மீன்களுக்கான உணவுகள், தொட்டிக்கான அலங்கார பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த கடைகளில் கோல்டன் பிஷ், ஆஸ்கர்ஸ், கவுராமி, சக்கர் பிஷ், ஃபைட்டர், கப்பி, கார்ப் உள்ளிட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அலங்கார மீன் வணிகத்திற்கான மையமே கொளத்தூர்தான். இங்கு புதிய நவீனமயமான காம்ப்ளக்ஸ் கட்ட போவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: இங்கு மீன் கடைகள் அனுமதியுடனும் அனுமதியில்லாமலும் இருக்கிறது. அவைகளின் மூலம் மாதத்திற்கு ரூ 300 கோடி வருமானம் கிடைக்கிறது.
இதை ஒழுங்குமுறைப்படுத்த இரு மாடிகளை கொண்ட மார்கெட் கட்டடம் கட்டப்படுகிறது. அந்த மார்க்கெட்டில் 180 கடைகள் இருக்கும். 8 கடைகளுக்கு சுவற்றிலேயே செயல்படும் மீன் தொட்டிகளை உருவாக்க போகிறோம். இந்த மீன் மார்க்கெட் மூலம் 3000 வணிகர்கள் பயன் பெறுவார்கள். கீழ் தளத்தில் 64 கடைகளும் முதல் தளத்தில் 70 கடைகளும் இரண்டாவது தளத்தில் 54 கடைகளும் இருக்கும். ஒவ்வொரு கடையும் 4 மீட்டருக்கு 5 மீட்டர் என்ற சைஸில் 3.75 மீட்டர் உயரத்தில் இருக்கும்.
அந்த புதிய காம்ப்ளக்ஸில் திறந்த வெளி தியேட்டர் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளதாக சேகர்பாபு தெரிவித்துள்ளார். அது போல் இரண்டாவது தளத்தில் 250 பேர் உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு உணவுக் கூடங்களும் பார்க்கிங் வசதியும் செய்து தரப்படும் என்றார், அந்த பார்க்கிங்கில் 230 கார்களையும் 200 பைக்குகளையும் விடுவதற்கு இடம் உள்ளது.
இந்த கட்டுமான பணிகளை சிஎம்டிஏ செய்யும். இதை பராமரிக்கும் பணிகளை மீன்வளத் துறை மேற்கொள்ளும். அனுமதியின்றி செயல்படும் கடைகள் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டு அவை சிஎம்டிஏவில் கட்டடத்தில் கொண்டு வரப்படும்.












Click it and Unblock the Notifications