செய்யாறு சிப்காட்டில் நிலம் எடுப்பதற்கு எதிராக தூண்டிவிடுகிறார்களா.. சுந்தர்ராஜன் விளக்கம்
சென்னை: தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளுக்கு யாருமே இடம் தருவதில்லை, அல்லது நிலம் எடுப்பதற்காக எதிராக மக்களை தூண்டிவிடுகிறார்கள் என சிலர் பொய்யான விஷயங்களை பரப்பிவருகிறார்கள் என பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் (தொழிற்பேட்டை) விரிவாக்கம் செய்ய தேத்துரை, குறும்பர், மேல்மா, வீரம்பாக்கம் உள்ளிட்ட 9 கிராமங்களில் 3174.12 ஏக்கர் நிலத்தை கையப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு ஆட்சேபம் தெரிவித்து விவசாயிகள் உள்பட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இப்படி எதிர்ப்பு தெரிவித்து போராடிய சிலர் விவசாயிகள் மீது குண்டாஸ் போடப்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டாஸ் திரும்ப பெறப்பட்டது.

தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டமான திருவண்ணாமலையில் தொழிற்சாலைகள் கொண்டுவர விரும்பாத சிலர் போராட்டத்தை தூண்டிவிடுவதாக குற்றச்சாட்டு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து பலரும் பெங்களூரு சென்னை போய் வேலை செய்து வரும் நிலையில், புதிய தொழிற்சாலைகள் உருவானால் தான் வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆனால் தொழிற்சாலைகளுக்கு இடம் தராமல் போராட்டத்தை சிலர் தூண்டி விடுவதாக புகார் எழுந்துள்ளது.
அப்படித்தான் செய்யாறு சிப்காட் விவகாரத்தில் சிலர் தூண்டுதலின் பேரில் விவசாயிகள் இப்படி போராட்டத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன் எக்ஸ் தளத்தில் (ட்விட்டர்) வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: "தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளுக்கு யாருமே இடம்தருவதில்லை, அல்லது நிலம் எடுப்பதற்காக எதிராக மக்களை தூண்டிவிடுகிறார்கள் என சிலர் பொய்யான விஷயங்களை பரப்பிவருகிறார்கள்.
தமிழ்நாட்டில் பழைய தொழிற்சாலைகள் அமைந்துள்ள (கோவை, அம்பத்தூர், சிவகாசி போல்) இடங்களை தவிர சிப்காட்டின் கீழ் 28தொழிற்பேட்டைகளில் 38,500ஏக்கர் நிலம் உள்ளது, இதில் பல தொழிற்சாலைகள் இயங்கிவருகின்றன. இதைத்தவிர 7 இடங்களில் தொழிற்பேட்டைகளை அமைக்க 6,035 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு வேலைகள் நடைபெற்று வருகின்றன.
“தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளுக்கு யாருமே இடம்தருவதில்லை, அல்லது நிலம் எடுப்பதற்காக எதிராக மக்களை தூண்டிவிடுகிறார்கள் என சிலர் பொய்யான விஷயங்களை பரப்பிவருகிறார்கள்.
— G. Sundarrajan (@SundarrajanG) November 18, 2023
தமிழ்நாட்டில் பழைய தொழிற்சாலைகள் அமைந்துள்ள (கோவை, அம்பத்தூர், சிவகாசி போல்) இடங்களை தவிர சிப்காட்டின் கீழ்… pic.twitter.com/dKQGRUcrDy
இதுபோக, 11 ஊர்களில், 14,695 ஏக்கர் நிலப்பரப்பில் தொழிற்பேட்டைகள் அமைக்க பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவும் போதாது என்று 18 இடங்களில் 11,095 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு முதல் கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இதைத்தவிர சிட்கோ தொழிற்பேட்டைகள், டிட்கோ பார்க்குகள், எல்காட் பார்க் என பல இடங்களில் சேவை மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே உள்ள தொழிற்பேட்டைகள் தனி, உதாரணமாக அம்பத்தூர், கிண்டி போன்ற தொழிற்பேட்டைகள் இல்லாமல் பல இடங்களில் தொழிற்சாலைகள் அமைக்க பல்வேறு துறைகளின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவற்றிற்கெல்லாம் மக்களிடம் இருந்துதான் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. மேல்மா அருகில்கூட தொழிற்பேட்டைகள் இயங்கிவருகின்றன.சுற்றுச்சூழலை கெடுக்காத தொழிற்சாலைகளுக்கு எதிராக யாரும் போராடுவது கிடையாது. எனவே இங்கே யாரும் தொழிற்சாலைகள் வேண்டாம் என்றெல்லாம் சொல்வது கிடையாது, அதே நேரத்தில் விளைநிலங்களை பாதுகாக்க வேண்டும் என்றுதான் கோருகிறோம்." இவ்வாறு பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications