தலைமை நீதிபதி இடமாற்ற பரிந்துரை...வலுக்கும் போராட்டம்... மூத்த வழக்கறிஞர்கள் அமைதி ஆர்ப்பாட்டம்
தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா மாநில தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய கொலிஜியம் பரிந்துரைத்ததை திடர்ந்து ஆட்சேபித்து வரும் தமிழ்நாடு-புதுவை பார்கவுன்சில், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தற்போது இதன் உச்சகட்டமாக சென்னை உயர் நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் அமைதி போராட்டம் நடத்தினர்.
தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி
தமிழக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கொல்கொத்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி கடந்த 2021 ஜனவரி மாதம் 4 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் 50 தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட ஏ.பி.சாஹியின் பதவிக்காலம் டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைந்ததை அடுத்து சஞ்ஜிப் பானர்ஜியை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது.
2023 நவம்பர் 1 ஆம் தேதி இவர் ஓய்வு பெறும் நிலையில் தற்போது மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. அதே சமயத்தில் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி முனேஷ்வர் பந்தாரியை நியமனம் செய்ய பரிந்துரை செய்துள்ளது. இந்த இரு பரிந்துரைகளும் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இடமாற்ற பரிந்துரை சர்ச்சை
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜியின் செயல்பாடு, வேகமாக வழக்குகளை பைசல் செய்தது, முக்கிய வழக்குகளில் சிறப்பான தீர்ப்பு தமிழகம் முழுவதும் பெரிய வீச்சை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவரை திடீரென 5 நீதிபதிகள் கொண்ட சிறிய மாநிலத்துக்கு மாற்ற கொலிஜியம் பரிந்துரைத்ததன் பின்னணியில் பல்வேறு சந்தேகங்களையும் மாற்றும் அவசியம் ஏன் என வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையைச் சேர்ந்த 237 வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்ற கொலிஜியத்தில் அங்கம் வகிக்கும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா உள்ளிட்ட ஐந்து நீதிபதிகளுக்கு கடிதம் அனுப்பினர்.
வழக்கறிஞர்கள் கொலிஜியம் தலைவருக்கு கடிதம்
சென்னை உயர் நீதிமன்ற தலைமையாக நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவியேற்று 10 மாதங்கள் கடந்துள்ள நிலையில், அவரது மாற்றம் என்பது பொதுநலன் அடிப்படையிலா அல்லது சிறந்த நீதி பரிபாலனத்துக்கா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளதாக, 237 வழக்கறிஞர்கள் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல 75 நீதிபதிகளை கொண்ட சார்ட்டர்டு உயர் நீதிமன்றமான, சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து, 2013ம் ஆண்டு துவங்கப்பட்டு, இரு நீதிபதிகள் மட்டுமே உள்ள மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜியை மாற்றுவதும் கேள்வியை எழுப்பியுள்ளதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்த பாகுபாடும் இல்லாமல் துணிச்சலாக செயல்படும் நீதிபதியை முக்கியத்துவம் இல்லாத இடத்துக்கு மாற்றுவது என்பது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட காலத்தில் நடந்தது எனவும், இந்த மாற்றம் என்பது நீதிபதியின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி இடமாற்ற பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கடிதத்தில் கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பல்வேறு மூத்த வழக்கறிஞர்கள் முன்னாள் நீதிபதிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நீதிபதியே ஆட்சேபம் தெரிவிக்காதபோது வழக்கறிஞர்கள் தேவையில்லாமல் பிரச்சினை கிளப்புவதாக அதிமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த பாபு முருகவேல் குற்றம் சாட்டியிருந்தார்.
அதிமுக வழக்குகள், அதிமுக பொதுச் செயலாளர் வழக்கு, கோடநாடு வழக்கு, முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகள், அறநிலையத்துறை சார்ந்த வழக்குகள் என பல முக்கியத்துவமான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தலைமை நீதிபதியின் இடமாற்ற பரிந்துரை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்நிலையில் இன்று உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மூத்த வழக்கறிஞர்கள் தலைமையில் உயர் நீதிமன்ற வாயில் முன் அமைதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைமை நீதிபதி இடமாற்ற பரிந்துரையை கொலிஜியம் திரும்பப்பெற வேண்டும் என கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்பாட்டத்திற்கு பின் பேசிய மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர் பிரசாத் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"இன்றைக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை இடமாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளார்கள், நாளை இது மற்றவர்களுக்கும் வரலாம். நேர்மையாக சட்டப்படி தீர்ப்பளிக்கும் நீதிபதிகளும் நாளை நாம் இதேப்போன்று சட்டப்படி நேர்மையாக தீர்ப்பளித்தால் தமக்கும் இதேப்போன்று இடமாற்றம் வரலாம் என்று அஞ்சப்படும் நிலை உள்ளது.
இப்போது உள்ள பிரச்சினை உயர்நீதிமன்ற நீதிபதிகளை மிகவும் அரிதாக மட்டுமே மாற்றம் செய்ய முடியும், அது சாதாரண விஷயம் அல்ல. அவர்கள் அரசாங்க ஊழியர்கள் அல்ல, நீதித்துறையின் ஊழியர்கள். இதுபோன்ற இடமாற்றங்கள் நிகழுமேயானால் நீதிபதிகள் இருப்பார்கள், நீதிமன்றங்கள் இருக்காது நான் தெளிவாக வலியுறுத்துகிறேன்.

கொலிஜியம் முதன்முறையாக அரசியல் சாசனத்தில் இல்லாத பவரை தனக்கே எடுத்துக்கொண்டுள்ளார்கள். முன்னர் இதுபோன்ற இடமாற்றங்கள் அரிதாக நடக்கும், தற்போது அடிக்கடி நடப்பது வாடிக்கையாக உள்ளது. நேர்மையாக நீதிபதிகள் தீர்ப்பளித்ததால் இவ்வாறு இடமாற்றம் நிகழ்வதாக கருதுகிறேன்" இவ்வாறு மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர் பிரசாத் தெரிவித்தார்.
வலுக்கும் போராட்டம்
ஏற்கெனவே தலைமை நீதிபதி தஹிலா ரமானி இடமாற்றமும் சர்ச்சையானது, அவர் ராஜினாமா செய்துவிட்டுச் சென்றார். இந்நிலையில் 10 மாதத்துக்குள் தமிழகம் போன்ற மிகப்பெரிய நீதிமன்ற தலைமை நீதிபதியை மாற்றும் அவசியம் என்ன என்பதுதான் வழக்கறிஞர்கள் கேள்வியாக உள்ளது.தலைமை நீதிபதியை எதற்காக பணியிட மாற்றம் செய்தார்கள் என்பதை விளக்க வேண்டும். மேலும், எந்தவொரு காரணமும் கூறாமல் மேகாலயா நீதிமன்றத்திற்கு மாற்றியது பயங்கரமான ஒன்று. எந்த ஒரு காரணமும் இல்லாமல் பணியிட மாற்றம் செய்தது சர்வாதிகாரம் போன்றது.
இதற்கு முன் நீதிபதி தஹில் ரமாணியை மேகலாயா நீதிமன்றத்திற்கு நீதிபதியாக பணி மாற்றம் செய்தார்கள் ஆனால் அதை அவர், எதிர்த்தன் காரணமாக சிபிஐ விசாரணை நடைபெற்றது. அவரையும் எதற்காக இடமாற்றம் செய்தார்கள் என்பதை விளக்கவில்லை. இது அரசியல் சாசனத்திற்கு முரணாக உள்ளது.
தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜியை இடமாற்றம் செய்ததில் மத்திய அரசினுடைய தலையீடு உள்ளதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications