இந்த 2 பேரு.. கொம்பு சீவிவிட்ட ஸ்டாலின்.. கைகோர்த்த அடுத்த தலைமுறை.. சொன்னதை கவனிச்சீங்களா..?
சென்னை : திராவிட இயக்கக் கொள்கைகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க திமுக முன்னெடுத்துள்ள திட்டங்கள் குறித்துப் பேசியுள்ள திமுக தலைவரும், முதல்வருமான முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், டிஆர்பி ராஜா இருவரின் பணிகளையும் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.
இளைஞர்கள் மத்தியில் திராவிட இயக்க கருத்தியலை பரப்பும் வகையில், திராவிட மாடல் பயிற்சிப் பாசறைகளை முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் திமுக இளைஞரணி நடத்தி வருகிறது. திராவிட இயக்கத்தின் சாதனைகள் இந்தப் பாசறைகளின் மூலம் இளைஞர்களுக்கு விளக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல, திமுக ஐ.டி விங் செயலாளரான டி.ஆர்.பி.ராஜா முன்னெடுப்பின்படி சமூக வலைதளங்களில் திராவிடம் பற்றிய கருத்துரையாடல் நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அடுத்த தலைமுறை இளைஞர்களை திராவிட கருத்தியல் நோக்கி ஈர்க்க, அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

ஸ்டாலின் பதில்கள்
திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், உங்களில் ஒருவன் எனும் கேள்வி பதில் நிகழ்வு மூலம், மக்களின் சில பொதுவான கேள்விகளுக்கு விடையளித்திருக்கிறார். திராவிடவியல் கோட்பாடுகள் - திராவிட மாடல் ஆட்சி நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து சமூக வலைதளங்களிலும் மக்கள் உள்ளங்களிலும் எழும் கேள்விகளுக்கு, மு.க.ஸ்டாலின் பதில் அளிக்கும் "உங்களில் ஒருவன் பதில்கள்" தொடரின் முதல் பாகம் இன்று வெளியிடப்பட்டது.

2 பேரை கவனிக்கலையா?
அதில், திராவிட இயக்கக் கொள்கைகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க திமுக தவறிவிட்டதாக நீங்கள் நினைக்கிறீர்களா? எனும் கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், "இளைஞரணிச் செயலாளர் தம்பி உதயநிதி ஸ்டாலின் நடத்துகிற திராவிட பயிற்சிப் பாசறைக் கூட்டங்களையும் - தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா நடத்திய திராவிட மாதம் கூட்டங்களையும் நீங்கள் கவனிக்கவில்லை என்று நான் நினைக்கிறேன்.

திராவிட மாடல் பயிற்சிப் பாசறை
திமுக இளைஞரணி சார்பாக, கடந்த ஜூலை 5-ஆம் தேதி தொடங்கி, கலைஞர் 99 கருத்தரங்கம் மற்றும் திராவிட மாடல் பயிற்சிப் பாசறை தொடங்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும், உணர்ச்சியோடு நடத்தப்பட்டு வருகிறது. இத்தகைய பாசறைக் கூட்டங்கள் 187 தொகுதிகளில் இதுவரை நடந்திருக்கிறது. மீதமிருக்கும் பகுதிகளிலும் அடுத்தடுத்து நடத்தப்பட இருக்கிறது.

இதுவே எடுத்துக்காட்டு
கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுபவர்கள் பேசி முடித்ததும், பின்னர் நடைபெறும் கேள்வி - பதில் பகுதியில், இளைஞர்கள் தங்களுக்கான கேள்விகளுக்கு விளக்கங்களைப் பெறுகிறார்கள். ஏன், எதற்கு, எப்படி எனப் பகுத்தறிவுச் சிந்தனையைத் தூண்டும் கேள்விகளைக் கேட்கும் இளைஞர்களின் ஆர்வமே திராவிட இயக்கத்தின் கொள்கைகள் எப்படி கொண்டு செல்லப்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு. தனது அடிப்படைக் கொள்கைகளை விதைக்க தி.மு.க என்றைக்கும் தவறியது இல்லை.

உதயநிதி - டிஆர்பி ராஜா
திராவிட கருத்துகளை இளைஞர்களை நோக்கிப் பரப்புவதில், திமுக இளைஞரணியும், தகவல் தொழில்நுட்ப அணியும் தீவிரமாக இறங்கி இருக்கின்றன. ஐ.டி விங் மாநில செயலாளர் டி.ஆர்.பி.ராஜா, ஐ.டி.விங்கிற்கு புத்துயிரூட்டி வருகிறார். கடந்த செப்டம்பர் மாதத்தை திராவிட மாதமாக கொண்டாடி, தினந்தோறும், திமுக முன்னணி நிர்வாகிகளை ட்விட்டர் ஸ்பேசில் பேச வைத்து கவனம் ஈர்த்தது ஐ.டி.விங். செப்டம்பர் மாதத்தின் கடைசி நாளில் முதல்வர் ஸ்டாலினை ட்விட்டர் ஸ்பேசில் பேச வைத்து அசத்தினர்.

2 பேர்
அதேபோல, முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி கடந்த ஜூலை மாதம் முதல் திராவிட மாடல் பயிற்சிப் பாசறைகளை பல்வேறு இடங்களில் நடத்தி வருகிறது உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான திமுக இளைஞரணி. இளைஞர்களுக்கு திராவிடக் கருத்தியல் பற்றி தெளிவு ஏற்படுத்தும் வகையில் சிறப்பான பேச்சாளர்களையும், அறிஞர்களையும் கொண்டு இந்த பாசறை கூட்டங்கள் நடத்தப்படுவது நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த இரண்டு முயற்சிகளையும் தான் குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

அடுத்த தலைமுறை
அடுத்த தலைமுறை இளைஞர்களை திராவிட கருத்தியல் நோக்கி ஈர்க்க, அடுத்த தலைமுறை அரசியல்வாதிகளான உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் தீவிரமாக இறங்கியுள்ளதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டிப் பேசியிருக்கிறார். தமிழ்நாடு மட்டுமல்லாது இந்திய அளவிலும் ஐ.டி.விங் நிர்வாகிகளை நியமிக்க டி.ஆர்.பி.ராஜா தயாராகி வருவதும் கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications