எடப்பாடி பழனிச்சாமி VS எஸ்பி வேலுமணி.. 2 ஆக பிளந்த அதிமுக இனி யார் வசம் செல்லும்? எளிய விளக்கம்
சென்னை: தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசு கோரிய நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவில் எஸ்பி வேலுமணி தலைமையிலான அணியின் 25 எம்எல்ஏக்கள் ஆதரவு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதன்மூலம் அதிமுக பிளவுப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி VS எஸ்பி வேலுமணி அணிகளாக மாறி உள்ளது உறுதியாகி உள்ள நிலையில் யார் வசம் அதிமுக செல்லும்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
அதிமுக தற்போது இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்பி வேலுமணி - சிவி சண்முகம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இன்று சட்டசபையில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்தது.

இதில், எடப்பாடி பழனிச்சாமி, கொறடாவாக நியமித்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி அதிமுகவின் 47 எம்எல்ஏக்களுக்கும் நேற்றே இ-மெயில், மெசேஜ், பதிவு தபால் மூலம் தவெகவிற்கு எதிராக அதிமுக எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கூறினர்.
ஆனால் இன்று எஸ்பி வேலுமணி - சிவி சண்முகம் தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்களில் 22 பேர் தவெகவிற்கு ஆதரவாக நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் வாக்களித்தனர். இதனால் முதல்வர் விஜய்யின் நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு 144 பேரின் ஆதரவு கிடைத்தது. விஜய்யின் நம்பிக்கை கோரும் தீர்மானம் வெற்றி பெற்றது.
அதேவேளையில் அதிமுகவில் இருந்த பிளவு உறுதியாகி உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்களில் 22 பேர் விஜய் கோரிய நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தனர். இவர் அணியில 1.எடப்பாடி பழனிச்சாமி, 2.ஓஎஸ் மணியன், 3.அக்ரி கிருஷ்ணமூர்த்தி, 4.ராஜேந்திரன், 5.கேசி கருப்பண்ணன், 6.கோவிந்தராஜன், 7.சு.பழனிசாமி, 8.ராமச்சந்திரன், 9.உஷாராணி, 10.ஜெயசுதா லட்சுமிகாந்தன், 11.சம்பத்குமார், 12.தளவாய் சுந்தரம், 13.நல்லதம்பி, மணி, 14.முக்கூர் சுப்பிரமணியன், 15.ராஜசேகர், 16.சு.ராஜேந்திரன், 17.வெங்கடாசலம், 18.வெற்றிவேல், 19.வேலழகன், 21.வேலு, 22.ஜெயசங்கரன் ஆகியோர் உள்ளனர்.
ஆனால் எஸ்பி வேலுமணி - சிவி சண்முகம் அணியில் 25 அதிமுக எம்எல்ஏக்கள் விஜய்க்கு ஆதரவாகவாக்களித்தனர். இந்த அணியில் 1.எஸ்பி வேலுமணி, 2.கோ.ஹரி, 3.எஸ்.காமராஜ், 4.சி.விஜயபாஸ்கர், 5.கேபி அன்பழகன், 6.இசக்கி சுப்பையா, 7.ஆர் காமராஜ், 8.சத்தியபாமா, 9.மரகதம் குமரவேல், 10.மரகதம் வெற்றிவேல், 11.லீமா மார்ட்டின், 12.எஸ்எம் சுகுமார், 13.சேகர் திலீபன், 14.ஜெய்சங்கர், 15.என்எஸ்என் நடராஜ், 16.நத்தம் விஸ்வநாதன், 17.கா.மோகன், 18. ரவி மனோகரன், 19. இரா.ராகேஷ், 20.எம்ஆர் விஜயபாஸ்கர், 21.கே.சி.வீரமணி, 22.எஸ். ஜெயக்குமார், 23.பி.ஹரிபாஸ்கர், 24.அருண்மொழித்தேவன், 25.சிவி சண்முகம், 26.பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் உள்ளனர்.
இதனால் தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்த எம்எல்ஏக்களை எடப்பாடி பழனிச்சாமி தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பார். அதிமுக பொதுச்செயலாளர் என்று தான் கையெழுத்திட்டு இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றாலும் சட்டசபை கொறடா உத்தரவை மீறி தவெகவிற்கு ஆதரவளித்ததாக கூறி கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் எடப்பாடி பழனிச்சாமி முறையிடுவார்.
இதையடுத்து அவர்கள் தகுதி நீக்கம் செய்ய அதிகப்படியான வாய்ப்புள்ளது. ஆனால் இந்த விஷயத்தில் சபாநாயகரின் முடிவு தான் இறுதியானது. பொதுவாக ஒரு கட்சியில் எம்எல்ஏக்களில் 3ல் 2 பங்கு எம்எல்ஏக்கள் மொத்தமாக கட்சி மாறினால் கட்சி தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முடியாது. அப்படி பார்த்தால் அதிமுகவில் 47 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் எஸ்பி வேலுமணி - சிவி சண்முகம் அணியில் 32 எம்எல்ஏக்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் தற்போது 25 எம்எல்ஏக்கள் தான் உள்ளனர். 7 எம்எல்ஏக்கள் பற்றாக்குறையாக உள்ளனர்.
இதனால் 25 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தவெகவை சேர்ந்தவர் என்ற அடிப்படையில் எஸ்பி வேலுமணி தரப்பு 25 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யாவிட்டால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு நீதிமன்றம் செல்லாம். அப்போது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 25 எம்எல்ஏக்களின் எதிர்காலம் அமையும். தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அவர்கள் போட்டியிட்ட 25 தொகுதிகளுக்கும் 6 மாதத்தில் சட்டசபை தேர்தல் நடக்கும். அதில் அவர்கள் விஜய்யின் தவெகவில் சேர்ந்து போட்டியிட வாய்ப்புள்ளது.
இதனால் அதிமுக என்பது எடப்பாடி பழனிச்சாமி வசம் தான் இருக்கும். ஆனால் கட்சியின் பொதுக்குழு, பைலா உள்பட பிற முக்கிய விஷயங்களை ஆய்வில் கொள்ள வேண்டும். அதனடிப்படையில் எஸ்பி வேலுமணி - சிவி சண்முகம் ஆகியோர் கட்சிக்கு உரிமை கோர கூட வாய்ப்புள்ளது. தாங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் கூட அதனை எதிர்த்தும் ஏதாவது ஒரு சட்டத்தை வைத்து போராட வாய்ப்புள்ளது.
இதனால் அவர்கள் நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தை நாடலாம். இது நடக்கும் பட்சத்தில் இறுதி முடிவு நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் உத்தரவை சார்ந்து இருக்கும். மொத்தத்தில் அதிமுக தனித்தனி அணியாக பிரிந்து தற்போதும் பிளவுப்பட்ட நிலையில் தவித்து வருகிறது. ஆனால் தற்போதைய சூழலில் எடப்பாடி பழனிச்சாமி வசம் தான் அதிமுக இருக்க வாய்ப்புள்ளது. இதில் ஏதாவது மாற்றம் நடக்கிறதா? என்பதை அறிய நாம் இன்னும் சில வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications