பள்ளிகள் அருகே போதைப்பொருள் விற்றால் கடும் தண்டனை: புதிய சட்டத்திருத்தம் - முதல்வர் அறிவிப்பு
பள்ளி அருகே போதைப் பொருட்களை விற்பவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
சென்னை: பள்ளி கல்லூரிகள் அருகே போதை பொருட்கள் விற்பனை தடை சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும். கடும் தண்டனை விதிக்கப்படும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் சட்டசபையில் முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தனது துறை சார்ந்த கேள்விக்கு முதல்வர் பதில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பான்மசாலா, குட்கா உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் தடையை மீறி பல மாநிலங்களிலிருந்து குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுவது தொடர்கிறது. தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பான் மசாலா, குட்கா கடத்துபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பான்மசாலா, குட்காவை விற்பனை செய்பவர்களை பிடிக்க தீவிர வேட்டை நடைபெறுகிறது. இதுவரை குட்கா கடத்தலில் ஈடுபட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டசபையில் கேள்வி
இந்த நிலையில், இன்றைய சட்டசபைக் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின் போது, பென்னாகரம் எம்.எல்.ஏ ஜி.கே மணி போதை பொருட்கள் விற்பனையை தடுப்பு நடவடிக்கை எடுத்தாலும் பள்ளி கல்லூரிகளுக்கு முன்னர் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறது. இது சாதாரணமானது அல்ல, பான்மசாலா, குட்கா போன்ற பொருட்கள் வடமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இது உற்சாகத்தை கொடுக்கும் என நம்பி மாணவர்கள் இதற்கு அடிமையாகி விடுகின்றனர் என்றார். தொடர்ந்து பேசிய அவர், பான்மசாலா, குட்கா போன்ற பொருட்களுக்கான தடை சட்டத்தில் மேலும், திருத்தம் கொண்டு வந்து முற்றிலும் தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை மட்டுமன்றி தமிழகம் முழுவதும் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினார்.

முதல்வர் பதில்
அதற்கு பதிலளித்துப்பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழகத்தில் குட்கா பொருட்கள் முற்றிலும் தடுக்கப்படும். தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்போர், கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குட்கா விஷயத்தில் காவல்துறையினரை ஊக்குவிக்க தமிழக அரசு நிச்சயம் தயங்காது என்றார். போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மூலம் 3,413 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை முற்றிலும் தடுக்கப்படும்.

புதிய சட்டத்திருத்தம்
இதுவரை 14,943 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 11,247 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறிய அவர் பள்ளி கல்லூரிகள் அருகே போதை பொருட்கள் விற்பனை தடை சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்றார்.போதை மனமயக்கும் பொருட்கள் தடைச்சட்டம் 1985 கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும், பள்ளி கல்லூரிகளுக்கு அருகே போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க சட்டத்தில் புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

காவல்துறையினருக்கு பரிசு
மேலும், காவல்துறைக்கு ஊக்க ஊதியம், சிறப்பு பரிசு வழங்கப்படுமா என்று ஜி.கே.மணி கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு என்றும் காவல்துறையை ஊக்குவிக்க தயங்காது, மேலும், பரிசீலித்து ஆராய்ந்து சிறப்பு செய்யமுடிமோ அந்த ரிவார்டும் நிச்சயம் செய்யும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications