தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஒரே நாளில் 2 ஜாக்பாட்.. இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கான முன்பணம் ரூ.50 லட்சமாக உயர்வு 'பட்ஜெட்' அறிவிப்பு அமலுக்கு வந்தது. இதேபோல் அகவிலைப்படி உயர்வும் நேற்று அறிவிக்கப்பட்டது.
அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கான முன்பணம் ரூ.50 லட்சமாக உயர்த்தப்பட்டது. இது தொடர்பான 'பட்ஜெட்' அறிவிப்பு அமலுக்கு வந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் அபூர்வா நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-
அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கான முன்பணம் ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தப்படும் என்று தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு இந்த நிதியாண்டில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
பழைய விகிதப்படி வீடு கட்டுவதற்கான முன்பணத்தைப் பெற ஒப்புதல் கிடைக்கப் பெற்று, ஒரு தவணைத் தொகை கூட பெறாதவர்களுக்கு புதிய உயர்த்தப்பட்ட விகிதம் பொருந்தும். அவர்கள் ரூ.40 லட்சத்துக்குப் பதிலாக ரூ.50 லட்சம் வரையில் முன்பணத்தை பெற்றுக் கொள்ளலாம். முன்பணத்துக்காக விண்ணப்பித்துள்ளவர்களுக்கும், வீட்டை கட்டி முடிக்காதவர்களுக்கும் புதிய உயர்த்தப்பட்ட விகிதம் பொருந்தும்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோல் தமிழக அரசு அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு நேற்று அறிவித்தது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், "அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும்பணியில் தங்களை அர்ப்பணித்து செயல்படும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கினை முழுமையாக உணர்ந்துள்ள இந்த அரசு, அவர்களின் நலனை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது. இந்த அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து, கடந்த அரசு விட்டுச் சென்ற கடும் நிதிநெருக்கடி மற்றும் கடன் சுமை, கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட வருவாய் இழப்பு ஆகியவற்றுக்கு இடையேயும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன் இந்த அரசு செயல்பட்டு வருகின்றது.
இந்த வகையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு குறித்து கனிவுடன் பரிசீலித்து, இந்த உயர்வினை 01.04.2023 முதல் செயல்படுத்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள்.
இதன்படி, தற்போது 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.04.2023 முதல் 42 சதவீதமாக உயர்த்தப்பட்டு வழங்கப்படும். இதனால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இந்த உயர்வால் ஆண்டு ஒன்றிற்கு தமிழ்நாடு அரசுக்கு 2,366.82 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இந்தக் கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.
மேலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, எதிர்வரும் காலங்களிலும் மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம், உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வைச் செயல்படுத்திடும்" இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications