எத்தனை கெட்டப் போட்டாலும் சரி..அண்ணா அறிவாலயத்தின் துகளைக் கூட அசைக்க முடியாது..மு.க.ஸ்டாலின் பதிலடி
சென்னை: 2026ல் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கட்டமைப்பு ரீதியாக மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக தரப்பில் நேற்று புதிதாக 4 மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்திற்கு பொறுப்பு அளிக்கப்பட்டது.
கடந்த முறை கொங்கு மண்டலத்தில் திமுக சறுக்கிய நிலையில், இம்முறை ஓராண்டுக்கு முன்பாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அண்ணா அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் எடுக்காமல் போக மாட்டேன் என்று கூறிய அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அதில், திமுக தொண்டர்களின் உழைப்பும் பொதுமக்களின் ஆதரவும் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் 7வது முறையாகக் கழகத்தை ஆட்சியில் அமர்த்தும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். தமிழ்நாட்டு மக்கள் நமக்கு வழங்கிய ஆட்சியை அவர்களுக்கான ஆட்சியாக நாம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நமது திராவிட மாடல் அரசு பல முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் மத்திய பாஜக அரசு நமக்குரிய நிதியை வழங்காமல் தமிழ்நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. மாநில உரிமைக்கு எதிரான பாஜக அரசின் பழிவாங்கும் போக்கையும் எதிர்கொண்டு இந்தியாவின் முன்னோடி மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்தியிருக்கிறோம்.
மத்திய அரசின் நிறுவனங்களும், நிதி ஆயோக் போன்ற அமைப்புகளும் வெளியிடும் புள்ளிவிவரங்களில் தமிழ்நாடு பல்வேறு இலக்குகளில் சிறந்து விளங்குகிறது. அப்படியிருந்தும் நமக்குரிய நிதிப் பங்களிப்பு கிடைக்கவில்லை. நமக்கான திட்டங்களை பாஜக அரசு முன்னெடுப்பதில்லை. தமிழ்நாட்டை பாஜக வஞ்சித்தாலும், திராவிட மாடல் அரசின் நலத் திட்டங்கள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் பயனளிக்கிறது.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில், அதிமுக ஆட்சியில் பின்னோக்கித் தள்ளப்பட்ட தமிழ்நாட்டை மீட்டு, வலிமையும் செழிப்புமிக்க மாநிலமாக மாற்றிடுவதற்கான திமுகவின் 7 அம்சத் திட்டங்களை வெளியிட்டு, அவற்றை நிறைவேற்றுவதற்கு 10 ஆண்டுகள் தேவை என்பதைக் குறிப்பிட்டு, அந்த வாய்ப்பைத் திமுகவுக்கு வழங்குங்கள் என்று கேட்டேன்.
முதல் 5 ஆண்டுகாலத்தை நம்பிக்கையுடன் வழங்கிய மக்கள், நமது திராவிட மாடல் ஆட்சியின் திறன்மிகு நிர்வாகத்தையும், சிறப்பான திட்டங்களையும் உணர்ந்து தொடர்ச்சியான வாய்ப்பை வழங்கிடத் தயாராக இருக்கிறார்கள். திமுகவுக்கு நல்வாய்ப்பு அமைகிறதென்றால் அதனைக் கெடுப்பதற்கான சதிகளைச் செய்யும் அரசியல் சக்திகள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு முகமூடியுடன் வெளியே வரும்.
தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான, தமிழ்நாட்டுக்கு எந்தப் பயனுமில்லாத, கள்ளக் கூட்டணி வைத்திருக்கிற, காசு வாங்கிக் கொண்டு கூவுகிற அந்த முகமூடிகளைக் கிழித்தெறிந்து கழகத்தின் தலைமையிலான அணியின் வெற்றியை உறுதி செய்வோம். அந்த வெற்றியை அடைவதற்கான நிர்வாக வசதிக்காகத்தான் மாவட்டக் கழக நிர்வாகத்தில் மாற்றங்கள் தொடங்கியுள்ளன.
திருநெல்வேலி, திருவள்ளூர், தஞ்சாவூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதுபோலவே ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களின் பொறுப்பிலான சட்டமன்றத் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
சட்டமன்றத் தேர்தலுக்கு ஓர் ஆண்டுகாலமே இடையில் உள்ளதால் அதற்கேற்ப களப்பணிகள் அமைந்திட வேண்டும் என்பதற்காகவே இந்த மாற்றங்களும் அதற்கேற்ற வகையிலான நியமனங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுபோல இன்னும் சில அறிவிப்புகளையும் உடன்பிறப்புகள் எதிர்பார்க்கக்கூடும். ஒரு பொறுப்பிலிருந்து ஒருவரை மாற்றுவது குறித்து ஒன்றுக்கு நூறு முறை யோசித்து, பல சுற்றுகள் ஆலோசித்து, கழகத்தின் நன்மை கருதியே இறுதி முடிவெடுப்பேன்.
இப்போதும் அப்படித்தான் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கழகத்தின் நலன் கருதி இத்தகைய முடிவுகள் தொடரும். இயக்கம் என்பது தேவைக்கேற்ற மாற்றங்களுடன் இயங்கிக் கொண்டிருந்தால்தான், காலத்திற்கேற்ற வளர்ச்சியைப் பெற முடியும். இந்த மாற்றங்களினால் கழகத்தில் ஏற்கனவே பொறுப்பில் இருந்தவர்களுக்கும் புதிதாகப் பொறுப்புக்கு வந்திருப்பவர்களுக்கும் என் இதயத்தில் நிறைந்துள்ள அன்பில் அணுவளவும் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை.
முன்பு பொறுப்பில் இருந்தவர்கள் தற்போது பொறுப்பில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிக் கடமையாற்ற வேண்டும். புதிதாகப் பொறுப்புக்கு வந்திருப்பவர்கள், ஏற்கனவே பொறுப்பில் உள்ளவர்களை அரவணைத்து, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழகங்கள் வரை எல்லாரையும் ஒருங்கிணைத்துச் செயலாற்றிட வேண்டும்.
இருநூறு தொகுதிகள் இலக்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றியினை உறுதி செய்யும் வகையில், களத்திற்கேற்ற வியூகம் அமைத்து, வெற்றிப் பாதையில் பயணிப்பதற்காக இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது களையெடுப்பு அல்ல, கட்டுமானச் சீரமைப்பு. கழகத்தின் கற்கோட்டையான அறிவாலயத்திலிருந்து செங்கல்லை உருவலாம் எனக் கனவு காண்பவர்கள் தரையில் விழுந்து தலையில் அடிபட்டபின், கனவு கலைந்து விழித்துக் கொள்ளலாமே தவிர, அறிவாலயத்தின் ஒரு துகளைக் கூட எவராலும் அசைக்க முடியாது.
அதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெருமை மிக்க வரலாறு. தமிழ்நாட்டு மக்கள் மனதில், குறிப்பாகப் பெண்கள், இளைஞர்கள் ஆகியோரிடம் பெரும் செல்வாக்குப் பெற்றுள்ள இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கொள்கைக் கூட்டணியினரான தோழமைக் கட்சியினரும் சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி முத்திரை பதிப்பதைத் தடுக்க முடியாது என்பது அரசியல் எதிரிகளுக்கும் நன்றாகத் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications